மகிழ்ச்சி நிறை பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்
திருப்பாடல் 100: 1 – 2, 3, 4, 5
ஒவ்வொருநாளும் ஆண்டவர் திருமுன் பல மக்கள் வந்து கூடுகிறார்கள். இவர்கள் எல்லாம் எதற்காக வருகிறார்கள்? எப்படிப்பட்ட மனநிலையோடு வருகிறார்கள்? என்று பார்க்கிறபோது, கடவுளிடமிருந்து ஏதாவது கிடைக்காதா? என்கிற தேவை மனநிலையோடு தான் வந்து கொண்டிருக்கிறார்கள். கடவுளை நாடி வருகிறபோது, அவர்களுக்கு பல தேவைகள் இருப்பதால், அவர்களின் முகமானது கவலை படர்ந்த முகமாக காட்சியளிக்கிறது. ஆனால், நமக்கென்று தேவை இருக்கிறதோ, இல்லையோ, நாம் அனைவரும் மகிழ்வான மனநிலையோடு ஆண்டவரைத் தேடிவர வேண்டும் என்பதுதான் ஆசிரியர் நமக்கு விடுக்கின்ற அழைப்பாகும்.
ஆண்டவரைத் தேடி வருகிறபோது, நாம் எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையோடு தான் இருக்க வேண்டும். ஏனென்றால், அவர் நம்மை படைத்தவர். ஒரு குழந்தை எவ்வளவு தான் அழுதுகொண்டிருந்தாலும், வருத்தம் கொண்டிருந்தாலும், தந்தையைப் பார்த்தவுடன், தாயைப் பார்த்தவுடன் தன் கவலைகளை மறந்து, புத்துணர்ச்சியோடு அழுகையை மறந்து, மகிழ்வை வெளிப்படுத்த தொடங்கிவிடும். அதேபோல, நாமும் கடவுளின் அருகாமையில் இருக்கிறபோது, நம்முடைய கவலை மறந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால், கடவுள் நம் கவலைப்போக்குவார் என்கிற நம்பிக்கை நமக்கு வேண்டும்.
நம்முடைய வாழ்வில் இத்தகைய கடவுள் நம்பிக்கையை நாம் பெற்றிருக்கிறோமா? என்று சிந்தித்துப்பார்ப்போம். கவலையும், கண்ணீரும் இந்த வாழ்க்கையை துன்பமான அனுபவமாக நமக்குக் காட்டிவிடும். எப்போதும் மகிழ்வாக இருப்பதற்கான மனத்தெளிவை, ஆண்டவர் நமக்குத் தந்தருள வேண்டுமென்று ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்