பொறுப்பு
இஸ்ரயேல் நாடு கடவுளின் திராட்சைத்தோட்டமாகப் பார்க்கப்பட்டது. ”படைகளின் ஆண்டவரது திராட்சைத்தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே” (எசாயா 5: 7). திராட்சைத்தோட்டங்கள் கரடிகளிடமிருந்தும், திருடர்களிடமிருந்தும் காப்பாற்றப்பட முள்வேலிகளால் அடைக்கப்பட்டிருந்தது. அதேபோல திராட்சைப்பழங்களிலிருந்து திராட்சைச்சாறு எடுக்க, ஒவ்வொரு திராட்சைத்தோட்டங்களிலும் குழிகள் வெட்டப்பட்டிருந்தன. அதேபோல திருடர்களைக்கண்காணிக்கவும், வேலைசெய்கிறவர்கள் தங்கவும் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீனம் வசதி வாய்ப்புகளற்ற ஒரு பகுதியாக இருந்தது. பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் தங்க இயலாத இடமாக அது இருந்தது. எனவே, நிலக்கிழார்கள் திராட்சைத்தோட்டத்தை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு, குத்தகைப்பணம் வாங்குவதில் மட்டும் தான் குறியாக இருந்தனர். குத்தகைப்பணம் மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றில் பெறப்பட்டது. பணமாகவோ, திராட்சைப்பழங்களாகவோ, விளைச்சலில் குறிப்பிட்டப்பகுதியாகவோ பெறப்பட்டது. இயேசு இந்த நற்செய்தியை சமயத்தலைவர்களுக்கு சொல்கிறார். அதாவது, எவ்வாறு இஸ்ரயேலை ஆண்டுவந்த தலைவர்கள் இறைவாக்கினர்களுக்குச்செவிசாய்க்காமல், இறுதியில் அவருடைய ஒரே மகனையே கொல்ல இருக்கிறார்கள் என்பதை இந்த உவமை நமக்கு அறிவிக்கிறது.
நாம் தான் பொறுப்பாளிகள் என்பதற்காக, நாம் நினைத்ததைச் செய்துவிடக்கூடாது. உயர்ந்த பொறுப்பு இருக்கிறவர்களுக்கு அதிகக்கடமையும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த பொறுப்புக்கேற்ற நம் வாழ்வையும், கடமை உணர்வோடு வாழ வேண்டும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்