புனித பர்த்தலொமேயு திருவிழா
இதைவிட பெரியவற்றைக் காண்பீர்கள்…
யோவான் 1:45-51
இறையேசுவில் இனியவா்களே! தூய பர்த்தலொமேயு திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் மேலும் நீயே ஆசியாக விளங்குவாய் போன்ற ஆசீர்வாதமான வார்த்தைகளைக் கேட்கும்போது நம் அகம் குளிர்கிறது. உடல்முழுவதும் ஊக்கமருந்து செலுத்தப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதே போன்று இன்றைய நற்செய்தியில் வருகின்ற வார்த்தையும் நம்மை புல்லரிக்க வைக்கின்றது. அந்த வார்த்தை, “இதைவிட பெரியவற்றைக் காண்பீர்” இது புனித பர்த்தலமேயுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதமான வார்த்தை.
இந்த ஆசீர்வாதமான வார்த்தைகளை நாம் பெறலாமா? கண்டிப்பாக பெறலாம். அதற்காக தூய பர்த்திலொமேயு எடுத்த இரண்டு முயற்சிகளை நாமும் எடுக்க வேண்டியதிருக்கிறது.
முயற்சி 1: அவரோடு அமர்ந்தார்
ஒரு சீடன் தன் குருவோடு அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்கும் போது முழுவதும் குருவுக்கு பிடித்தவனாக மாறுகிறான். குரு தன்னுடைய பிடித்தமான சீடனுக்கு தன் ஆசீர் முழுவதையும் அள்ளி அருளுவார். அதே போன்று நாம் இயேசுவுக்கு பிடிக்கும் போது அவர் ஆசீர்வாதமான வார்த்தைகள் தருவார். தூய பர்த்திலொமேயு ஆண்டவரோடு அமா்ந்தார். அதிலே அளப்பரிய ஆனந்தமும் அடைந்தார்.
முயற்சி 2: அவர் புகழை பரப்பினார்
தன்னுடைய சிந்தனையிலும், செயலிலும் ஒரு சீடன் தன்னுடைய ஆசானின் அறிவுரைகள நிறுத்தி அதன்படி வாழ்ந்து அவர் புகழ் பரப்பும் போது ஆசான் அதிக ஆனந்தமடைகிறார். அதேபோன்று ஆண்டவர் இயேசுவும் தன் புகழை, பெயரை பரப்பும் சீடர்களை அதிகமாகவே ஆசிர்வதிக்கிறார். அந்த வகையில் இன்றைய புனிதர் அதற்கு குறையே வைக்கவில்லை. எங்கு சென்றாலும் இயேசுவின் புகழை பரப்பினார். இயேசுவின் செல்வாக்கை உயர்த்தினார்.
மனதில் கேட்க…
1. ஆண்டவர் மனதார ஆசீர்வதிக்கும்படி இதுவரை நான் நடந்திருக்கிறேனா?
2. ஆண்டவரோடு அமரவும், அவர் புகழைப் பரப்பவும் எனக்கு ஆசை இருக்கிறதா?
மனதில் பதிக்க…
எனது செல்வாக்கு குறைய வேண்டும். அவரது செல்வாக்கு பெருக வேண்டும் (யோவா 3:30)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா