நீதியுள்ளவர்களாக வாழ்வோம்
ஆமோஸ் 8: 4 – 6, 9 – 12
ஓய்வுநாள் எப்போது நிறைவுறும்? என்று எதிர்பார்க்கிறவர்களை ஆமோஸ் இறைவாக்கினர் கடுமையாகச் சாடுகிறார், “கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடியும்?”. ஓய்வுநாள் என்பது வெறுமனே வழிபாட்டிற்காக மட்டும் வைத்திருக்கவில்லை. மாறாக, அது சமுதாய நீதி சார்ந்து சிந்தித்தன் வாயிலாக ஏற்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை. அன்று, வீட்டு உரிமையாளருக்கு மட்டுமல்ல, அந்த வீட்டில் பணி செய்யக்கூடிய பணியாளர்கள், விலங்குகள், அடிமைகள் என அனைவருக்கும் ஓய்வு தரக்கூடிய நாளாக இருந்தது,
இணைச்சட்டம் 5: 14 ” ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வுநாள். எனவே, அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும், மாடு, கழுதை, மற்றெல்லாக்கால்நடைகளும், உன் வாயில்களுக்கும் இருக்கும் அன்னியனும், யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ ஓய்வெடுப்பது போல், உன் அடிமையும், அடிமைப்பெண்ணும் ஓய்வெடுக்கட்டும்”. ஆனால், வியாபாரிகள் எப்போது ஓய்வுநாள் முடியும்? என்று காத்திருந்தனர். அப்போதுதான், அவர்கள் தங்கள் பணியாளர்களையும், அடிமைகளையும், விலங்குகளையும் வேலை கொடுத்து வருந்தச் செய்ய முடியும். அவர்களைச் சுரண்டிப் பிழைக்க முடியும். தங்கள் ஏமாற்று வியாபாரத்தை தொடர்ந்து நடத்த முடியும் என்று ஓய்வுநாள் முடிவிற்காக காத்துக் கொண்டிருந்தனர். கோதுமைப் பதர்களை ஏழைகளுக்காக விட்டு விட வேண்டும் என்று சட்டம் சொன்னது. ஆனால், அதையும் விட்டு வைப்பவர் யாரும் கிடையாது. அதனையும், நிலத்தின் உரிமையாளர்கள் விற்று பொருள் சம்பாதிக்க பேராசை கொண்டனர். இப்படியாக, சட்டம் தருகிற உண்மையான பொருளை உணர்ந்து கொள்ளாமல், ஏழைகளையும், எளியவர்களையும் சட்டத்தின் துணைகொண்டு, சுரண்டிப்பிழைக்கிறவர்களுக்கு எதிராக, ஆமோஸ் இறைவாக்கினர் வெகுண்டு எழுகிறார்.
நம்முடைய வாழ்வில் நாமும் கூட, நமக்கு கீழாக இருப்பவர்களை சுரண்டிப் பிழைக்கிறவர்களாக இருக்கிறோம். அவர்களை மனிதர்களாக நாம் மதிப்பதற்கு தவறிவிடுகிறோம். அவர்களை ஒரு பொருட்டாக எண்ணாதவர்களாக இருக்கிறோம். எப்போதும், இறைவனுடைய பார்வையில் நல்லவர்களாக, உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டிய அருளுக்காக மன்றாடுவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்