திட்டமிட்டு இழக்காதே!

(யோவான் 05 : 17-30)

ஓய்வு நாளன்று இயேசு குணமளித்ததனால்   பரிசேயர்கள் அவர் மீது கோபம் கொண்டு பொங்கி எழுகின்றனர். இன்றைய நற்செய்தி, அப்பரிசேயர்க்குப் பதிலாகவும், இன்னும் தெளிவில்லாமல் நிலைவாழ்வினைப் பற்றி கேள்வி கேட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கும் நல்லதொரு புரிதலாகவும் அமைகிறது.

புடிக்கும் காலத்திலே எல்லோர்க்கும் கணிதப் பாடம் எளிதாக வராது அல்லவா? அப்பொழுது எம் கணித ஆசிரியர் கூறுவார், நான் கணிதப்பாடத்தை எளிதாக்கி உங்கள் கைகளில் கொடுத்துவிட்டேன். இனி நீங்களே தேர்ச்சி பெறக் கூடாது என்று நினைத்தால் கூட உங்களால் ஆகமுடியாது. ஆனால் தேர்ச்சி பெறக் கூடாது என்று திட்டம் போட்டு செயல்பட்டால் மட்டுமே, உங்களால் தேர்ச்சி பெறாமலிருக்க முடியும் என்பார். இதைப் போன்று தான் நம் இயேசு “நிலைவாழ்வு” என்ற சூத்திரத்தை மிக எளிதாக்கி, நம் கண்முன், நம் கைகளில் வைத்துவிட்டார். “என் வார்த்தைகளைக் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புவோர் நிலைவாழ்வினைப் பெற்றுக் கொள்வர்”.

அவரது வாழ்நாள் முழுவதும் இதனைச் சார்ந்தே அவரது எண்ணம், சொல், செயல் அனைத்தும் அமைந்திருந்தது. இன்றைய நற்செய்தியில் இன்னும் கூடுதல் சிறப்பாக நாம் நிலைவாழ்வு பெற அல்லது இறைத்தீர்ப்பானது நாமே நமக்கு அளித்துக் கொள்ளும் தீர்ப்பே என்கிறார். நான் இயேசுவின் படிப்பினைகளுக்கு மாறாக, அவருடைய மதிப்பீடுகளுக்கு எதிராக, என் வாழ்வை அமைத்துக் கொள்ளும்போது நானே என்மீது தீர்ப்பிட்டுக் கொள்கிறேன் என்பதுதான் இதற்குப் பொருள். இவ்வாறு அவர், அனைத்தையும் பசுமரத்து ஆணிபோல் நமது மனதில் பதிய வைத்துவிட்டார். இனியாவது நாம் நிலைவாழ்வினைப் பெற அவரது வார்த்தைகளையும், அவரை அனுப்பியவரையும், இன்னும் ஆழமாக உறுதியாக நம்புவோம். இந்த தவக்காலத்தில் இறைவார்த்தையை அதிகமாக வாசிப்போம். அவரை அறிந்து கொள்ள மட்டுமல்ல, நம்மையே நாம் மீட்டுக் கொள்ள.

“இவராலன்றி வேறு எவராலும், மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு, வானத்தின் கீழ் மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை”(தி.ப 4:12).

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.