நல்ல செயல்பாடுகள்
ஒரு மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன், துறவியைச் சந்தித்தானாம். இந்த உலகத்திலே தான் நினைத்தது எல்லாம் சாதித்து விட முடியும், தனக்கு தேவையானதை எல்லாம் வாங்கிவிட முடியும். என்னால் வாங்க முடியாதது ஒன்றுமேயில்லை, என்று தற்பெருமையாகச் சொன்னானாம். அவர் கூறியதை அமைதியாக கேட்ட அந்த துறவி, ஒரு சிறிய ஊசியைக்கொடுத்து, ”தயவுசெய்து, நீங்கள் இறந்து மேலுலகத்திற்கு வருகிறபோது, இதனை எனக்காக கொண்டு வருவீர்களா? என்று கேட்டானாம். கோபமடைந்த அந்த செல்வந்தன், இது என்ன முட்டாள்தனமான பேச்சு? யாராலும் இதனைக் கொண்டு வரமுடியாதே? என்று கத்தினான். ”அதேபோலத்தான், நீ சேர்த்து வைத்திருக்கிற செல்வமும். இதனால், மேலுலகத்தில் ஒரு பயனும் கிடையாது. ஒரு பைசா கூட, நீ இங்கிருந்து அடுத்த உலகத்திற்கு எடுத்துச்செல்ல முடியாது. பகிர்ந்து வாழ்வதற்கு முயற்சி செய்” என்று துறவி தன் வழியே சென்றாராம்.
வாழ்க்கையில் தேவைக்கு அதிகமாக செல்வத்தைச் சம்பாதித்துவிட்ட பலபேரின் மனநிலை, இந்த செல்வந்தனின் மனநிலையைப் போலத்தான் இருக்கிறது. இந்த உலகத்தில் செல்வத்தை சேர்த்து விட்டோம், இனிமேல் கவலை இல்லை என்று, அகம்பாவத்தோடு, அறியாமையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கிருக்கிற சிறுதுரும்பை கூட அவர்களால், இறப்பிற்கு பின் எடுத்துச்சென்றுவிட முடியாது, என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கிறார்கள். இயேசுவின் போதனை இத்தகைய எண்ணம் கொண்ட மனிதர்களுக்குத்தான் என்றால், அது மிகையாகாது.
இந்த உலகத்தில் வாழக்கூடிய நாம் அனைவருமே எப்போதும், மறுஉலகத்தை நினைத்து நல்லது செய்யவேண்டியதில்லை. நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு, நன்மைகளை மற்றவர்களுக்குச் செய்ய முன்வருவோம். இந்த உலகத்தில் நாம் எதையும் கொண்டுவரவில்லை. அதேபோல, எதையும் கொண்டு செல்லப்போவதில்லை. எனவே, இந்த உலகத்தில் நல்ல மனிதர்களைச் சம்பாதிப்போம். நல்ல செயல்பாடுகளைச் செய்வதில் நம்மையே ஊக்குவிப்போம்.