நம்பிக்கைக்குரியவர்
நம்பிக்கைக்குரியவர் யார்? என்ற கேள்விக்கு பதிலாக வருவதுதான் இன்றைய நற்செய்தி. நமது வாழ்வில் நாம் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். யாருக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும்? ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம் என்றால், அந்த அலுவலகத்தலைவரின் நம்பிக்கைக்கு எல்லாருமே உரியவர்களாக இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் மட்டும் தான். எது அவர்களை நம்பிக்கைக்கு உரியவர்களாக மாற்றுகிறது? அவர்கள் தலைவர் மீது வைத்திருக்கக்கூடிய மதிப்பு, அவர்களின் கீழ்ப்படிதல், உண்மை, தலைவர் சொல்லக்கூடிய பணியைச் சிறப்பாகச் செய்வது – இவைதான் ஒரு மனிதரை நம்பிக்கைக்கு உரியவராக வைத்திருக்கிறது. அந்த நம்பிக்கை ஏதோ ஒரு நாளில் பெற்றுவிடுவதல்ல. சின்ன காரியங்களில் உண்மையாக இருக்கிறபோது, அந்த மனிதர் மட்டில், நமது நம்பிக்கையும் பெறுகிறது. ஆக, சிறிய காரியத்தில் நாம் உண்மையாக, நேர்மையாக இருக்கிறபோது, மற்றவர்களின் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக மாறுகிறோம்.
இன்றைய நற்செய்தியில் (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30) தலைவர் தனது பணியாளர்களிடம் தாலந்து ஒப்படைத்து பயணம் மேற்கொள்கிறார். திரும்பிவந்து, தான் கொடுத்த தாலந்தைப் பற்றி விசாரிக்கிறார். தாலந்து என்பது பணத்தின் மதிப்பைக் குறிக்கக்கூடிய சொல். அது விலைமதிப்புமிக்கது. அதனை தலைவர் சிறிய பொறுப்பு என்று கூறுவது, எந்த அளவுக்கு அவர் செல்வமிக்கவர் என்பதனையும், தன்னுடைய பணியாளர்கள் மட்டில், அவர் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையையும் நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பணியை திறம்பட செய்தவர்கள், தலைவரின் பாராட்டையும், மதிப்பையும் பெறுகிறார்கள். திறம்படச் செய்யாதவன் தண்டிக்கப்படுகிறான். அந்த மூன்றாவது மனிதரிடமும் தலைவன் நம்பிக்கை வைத்திருந்தான். எனவே தான், அந்த தாலந்தை அவனுக்குக் கொடுத்திருந்தான். எத்தனையோ பணியாளர்கள் இருக்கிறபோது, தலைவர் அவரிடம் கொடுத்திருந்தால், மற்றவர்களை விட, அவன் மீது அவர் அதிகமான மதிப்பு வைத்திருக்கிறார் என்று தான் நாம் நினைகக முடியும். ஆனால், தலைவரின் நம்பிக்கைக்கு அவன் ஏற்புடையவனாக இல்லை.
நாம் கடவுளின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இந்த நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடவுளின் நம்பிக்கையை பெறுவது கடினமானது அல்ல. நாம் செய்யக்கூடிய சாதாரண காரியங்களில், உண்மையாக இருப்பதுதான். சிறிய காரியங்களில் பொறுப்புணர்வோடு, உண்மையுள்ளவர்களாக வாழ, ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்