ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்

இன்றைய திருப்பாடல் ஓர் அரசத் திருப்பாடல். திபா 72க்குத் தலைப்பாக “அரசருக்காக மன்றாடல்” எனக் கொடுக்கப்பட்டுள்ளது. அடைப்புக்குறிக்குள் “சாலமோனுக்கு உரியது” எனத் தரப்பட்டுள்ளது.

சாலமோன் அரசர் ஞானத்துக்குப் புகழ் பெற்றவர். தமது மக்களை நீதியோடு வழிநடத்துகின்ற ஞானத்தைக் கடவுளிடம் கேட்டுப் பெற்றவர் (1 அர 3: 5-13). ஒருவேளை அவரே இத்திருப்பாடலை இயற்றியிருக்கலாம். காரணம் “கடவுளே, அரசருக்கு உமது நீதித் தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும். அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக. உம்முடையவரான எளியோர்க்கு நீதித் தீர்ப்பு வழங்குவாராக” என இத்திருப்பாடலின் முதல் இரண்டு அருள்வாக்குகளில் வாசிக்கிறோம், இன்றைய பதிலுரைப் பாடலாகவும் செபிக்கிறோம்.

திருப்பாடல் 2ஐப் போலவே, இந்தத் திருப்பாடல் 72ம் மெசியா இயேசுவை நீதி வழங்கும் அரசராகக் காண்பதால், இன்றைய பதிலுரைப் பாடலாகத் தரப்பட்டுள்ளது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு வழங்கிய நிகழ்ச்சியை வாசிக்கிறோம். ஆயரில்லா ஆடுகள் போலிருந்த பெருந்திரளான மக்கள்மீது இயேசு பரிவுகொண்டு நிகழ்த்திய இந்த அருஞ்செயலோடு தொடர்புடையதாக அமைந்துள்ளது இன்றைய திருப்பாடல்.

“எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக. ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக” (திபா 72: 4) என்னும் வரிகளை செபிக்கும்போது, இயேசுவின் இந்த அற்புதச் செயலை நினைவுகூர்ந்து, அவரே நீதியும், பரிவும் கொண்ட மெசியா என உணர்;ந்து நெகிழ்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்துக்கு நல்லதொரு முன் தயாரிப்பாக அமைந்துள்ளது இன்றைய திருப்பாடல்!

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது திருமகன் இயேசுவின் அற்புத நிகழ்விலே உம்முடைய நீதியையும், பரிவையும் கண்டு நன்றி செலுத்துகிறோம், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.