நன்மைக்கு அமோக வெற்றி!
லூக்கா 21:12-19
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
உலகில் வாழும் காலத்திலிருந்து கடைசி வரை நன்மைக்கும் தீமைக்கும் இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அந்த போட்டிகள் ஏதோ குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நடைபெறுவதல்ல. மாறாக தினம் தினம் நடைபெறுகின்றன. நாள்தோறும் நடைபெறும் இப்போட்டியில் நன்மை வெற்றி பெற்றால் நாம் சாதித்திருக்கிறறோம் என்று அர்த்தம். தீமை வெற்றி பெற்றால் நாம் சரிந்திருக்கிறோம் என்று அர்த்தம். பரிசோதித்துப் பார்க்க இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை பரிவோடும் பாசத்தோடும் அழைக்கின்றது. கிறிஸ்தவர்கள் நாம் நன்மையை வெற்றி பெற செய்ய வேண்டும். நம் வாக்குகள் அனைத்தையும் நன்மைக்கு அளிக்க வேண்டும். நன்மையை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நன்மையை நாடும் போது நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல அவற்றுள் முக்கியான இரண்டு.
1. எதிர்த்து பேச முடியாது
நாம் ஆண்டவர் பக்கமாக இருந்து நன்மையை நாடும் போது யாரும் நம்மை எதிர்த்து பேச முடியாது. அந்த அளவுக்கு ஞானத்தை கடவுள் நமக்கு தருகிறார். நாம் பேசுவது இனிமையாக இருக்கிறது. எதிரிகளை ஓடச்செய்கிறத. நம் பேச்சுமுன் அவர்கள் பேச்சு செல்வாக்கு இழந்து போகிறது.
2. எதிர்த்து நிற்க முடியாது
நன்மையை மட்டுமே நாம் நாடும் போது நமக்குள் தெய்வீக சக்தி வருகிறது. அந்த தெய்வீக சக்தி நம்மை மிகவும் பலமிக்கவர்களாக மாற்றுகிறது. ஆகவே நம் முன் இருள் இருக்க பயப்படுகிறது. அலகை நம் முன் நிற்க அஞ்சுகிறது. நடுங்குகிறது.
மனதில் கேட்க…
1. நான் நாள்தோறும் வெற்றி பெறச் செய்வது நன்மையா? தீமையா?
2. நன்மையில் நடந்து ஆண்டவரின் அத்தனை ஆசீரையும் அள்ளி தெய்வீக சக்தி கொண்டவனாக நான் மாறலாம் அல்லவா?
மனதில் பதிக்க…
நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன். உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது (லூக் 21:15)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா