இடிக்கப்படும்! எல்லாம் இல்லாமல் போகும்!

லூக்கா 21:5-11

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

நாம் ஆர்வமாக மண்ணகத்தில் வாழும் போது பல கட்டிடங்களை நமக்காக கட்டுகிறோம். பலவிதமான செல்வங்களை சேகரிக்கின்றோம். பல உறவுகளோடு உற்சாகமாக இருக்கின்றோம். சிறப்பு கார்களில் உலா வருகின்றோம். பல படிப்புக்களை படித்து மேதையாகின்றோம். சிறந்த வேலையில் அமர்கின்றோம். இவையெல்லாம் நமக்காக மட்டுமே செய்கின்றோம். நம் பெயர் மகிமை பெற செய்கின்றோம். நம் புகழை இரண்டு மூன்று பேர் சொல்ல வேண்டும் என்பதற்காக செய்கின்றோம். நம் பெருமைக்காக செய்யும் இவையனைத்தும் இடிக்கப்படும் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

எருசலேம் ஆலய கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படுவது போல நம் சுயநலத்திற்காக மண்ணகத்தில் செய்யும் அனைத்தும் இடிக்கப்படும். அவையனைத்தும் காணாமல் போகும். நம்முடைய மகிமைக்காக, பெருயருக்காக, புகழுக்காக செய்யும் அனைத்தும் வீண்.. முற்றிலும் வீண். இது விண்ணகத்திற்கு செல்வதற்கான தகுதியல்ல. கடவுளைச் சந்திப்பதற்கான காரணிகள் அல்ல. இவையனைத்தும் நமக்கு கேட்டை வருவிக்கும். கேடு வராமல் நம்மை தற்காக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தற்காப்பு வழிகளையும் இன்றைய வழிபாடு கவனமாய் கேட்போருக்கு சொல்லித் தருகிறது. இரண்டு வழிகள்.

1. ஒறுத்தல்
“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்பார்கள். ஆசைகள் அளவுக்கு அதிகமாகும் போது நம் வாழ்க்கை நஞ்சாக மாறுகிறது. ஆகவே தினம் தினம் ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தீய வார்த்தைகள் பேசுவதை ஒறுத்தல் செய்ய வேண்டும். தீயவற்றை பார்க்கும் கண்களுக்கு ஒறுத்தல் பயிற்சி கொடுக்க வேண்டும். தீயவைகளை செய்யத் துடிக்கும் மனதை ஒறுத்தல் என்னும் கயிறால் கட்ட வேண்டும். சுயநலப்போக்கிற்கு ஒறுத்தல் என்ற வேகத்தடை போட வேண்டும். தற்பெருமையை ஒறுத்தலால் தடை செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது நாம் விண்ணகக் கட்டிடத்தை இங்கே கட்டுகிறோம் என்பது பொருள். அது ஆண்டவர் பார்வையில் என்றும் நிலைத்திருக்கும்.

2. பொறுத்தல்
வாழ்க்கையில் நமக்கு எதிராக யாராவது பேசினால் உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டு கத்தக் கூடாது. பொறுத்துக்கொள்ள வேண்டும். நிதானமாக வாழ்க்கையில் முடிவுகள் எடுக்க வேண்டும். வேகமாக ஓடக் கூடாது. பிறர் செய்யும் குற்றங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும், புரிந்துக்கொள்ள வேண்டும். பொறுத்திருந்து பார்த்து பின் முடிவுகள் எடுக்க வேண்டும். இப்படி செய்யும் போது நாம் விண்ணகக் கட்டிடத்தை இங்கே கட்டுகிறோம் என்பது பொருள். அது ஆண்டவர் பார்வையில் என்றும் நிலைத்திருக்கும்.

மனதில் கேட்க…
1. மண்ணகத்தில் நான் கட்டிக்கொண்டிருப்பது எதை? என்னுடைய கட்டிடமா? கடவுள் கட்டிடமா?
2. ஒறுத்தல், பொறுத்தல் செய்தால் தானே நம் வாழ்க்கையில் நிறைவைக் காண முடியும்?

மனதில் பதிக்க…
பெருமை பாராட்ட விரும்புகிறவா் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்(2கொரி 10:17)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.