தொடர்ந்து நன்மை செய்வோம்
இயேசுவுக்கு எதிராக எதிர்ப்பு உச்சகட்டத்தை எட்டியிருந்த காலம். பரிசேயர்களும், சதுசேயர்களும் எப்படி இயேசுவை ஒழித்துக்கட்டலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த நேரம். இயேசு செல்கிற இடங்களுக்கு எல்லாம் சென்று, அவர் செய்கிற அத்தனையிலும் குற்றம் கண்டு அவருக்கு எதிராக சாட்சியங்களை அவர்கள் திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓய்வுநாளில் இயேசு கைசூம்பியிருக்கிற ஒருவனை குணப்படுத்துகிறார். குணப்படுத்துவது என்பது ஒரு வேலை. ஓய்வுநாளில் குணப்படுத்துவது என்பது வேலை செய்வதற்கு சமம். அதாவது ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதற்கு சமம். ஆனாலும், இயேசு ஓய்வுநாளில் அவனுக்கு சுகம் தருகிறார்.
இயேசு எதற்காக இவ்வளவு எதிர்ப்பையும் சம்பாதித்து ஓய்வுநாளில் குணப்படுத்த வேண்டும்? உண்மையிலே இயேசு அந்த மனிதனுக்கு சுகம் தரவேண்டுமென்றிருந்தால், மற்ற நாட்களில் இந்த புதுமையை செய்திருக்கலாம். இத்தனைநாட்கள் நோயினால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிற மனிதனுக்கு ஒருநாள் பொறுத்திருப்பது ஒன்றும் கடினமில்லைதான். அப்படி அவர் அன்றே அந்த மனிதனுக்கு சுகம் தரவேண்டுமென்று நினைத்திருந்தாலும், மறைவான இடத்தில் அந்த மனிதனைக்கூட்டிக்கொண்டு போய் சுகம் கொடுத்திருக்கலாம். இயேசு ஏன் தானாகவே தேவையில்லாத வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டும்? என்ற கேள்விகள் நிச்சயம் நம் மனதில் எழும். தன்னிடத்தில் குற்றம் காண மிகப்பெரிய சதிகாரக்கூட்டமே தன்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது இயேசுவுக்கு நன்றாகத்தெரியும். இருந்தபோதிலும், இயேசு துணிந்து ஓய்வுநாளில் குணப்படுத்துகிறார் என்றால் அதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான்: நன்மை செய்வதற்கு காலமோ, நேரமோ பயமோ தேவையில்லை என்பதுதான் அது.
ஒருவருக்கு நன்மை செய்வதற்கு நாம் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை. நன்மை செய்வதற்கு காலமும், நேரமும் பார்க்கத்தேவையில்லை. துணிவோடு நன்மை செய்ய வேண்டும். மகிழ்ச்சியோடு நன்மை செய்ய வேண்டும். நிறைவோடு நன்மை செய்ய வேண்டும். நன்மை செய்வது பற்றி எனக்கு நானே கர்வம் கொண்டிருக்க வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்