தேடி போ! உயரே கொண்டு வா!
மத்தேயு 18:12-14
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
இவ்வுலகில் பிறந்த அனைவரும் பயனுள்ளவர்கள். பயனற்றவர்கள் என்று யாரும் கிடையாது. எல்லாரையும் கடவுள் தாயின் கருவறையில் அர்ச்சித்து அற்புதமான பணி செய்ய அழைக்கின்றார். யாரையும் ஒதுக்காதீர்கள், யாரையும் வெறுக்காதீர்கள் என்ற அன்பான வேண்டுகோளோடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
குறைகள் உள்ளவர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை உற்சாகப்படுத்தி உயரே கொண்டு வரை இந்த நாள் நம்மை அழைக்கிறது. குறைகள் இருந்தாலும் உற்சாகத்தினால் மேலே வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். உயரே வந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் இதோ இரண்டு சாதனையாளர்கள்:
1. நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக்
நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக் (Nicholas James Vujicic) என அழைக்கப்படும், 36 வயது நிரம்பிய இவருக்கு திருமணமாகி மகிழ்வாக குடும்பம் நடத்திவரும் இவருக்கு, நான்கு குழந்தைகளும் உள்ளனர். தான் அன்புகூரும் மனிதரை அணைக்கவோ, எந்தப் பொருளையும் தூக்கவோ, எதையும் தொட்டு அனுபவிக்கவோ கரங்கள் இல்லை. நடக்கவோ, ஓடவோ, ஆடவோ கால்கள் இல்லை. ஆயினும், இவர், Life without Limbs என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை 2005ம் ஆண்டில் ஆரம்பித்து, உலகெங்குமுள்ள இலட்சக்கணக்கான மாற்றுத்திறனாளர்களுக்கு வாழ்வளித்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரைச் சேர்ந்த இவர், ஒரு கட்டத்தில் தான் உயிர் வாழ வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்தார். ஆயினும், தன் பெற்றோரை நினைத்து தனது முடிவை மாற்றிக் கொண்டு, தன்னால் என்ன செய்ய முடியும் என சிந்தித்தார். முதலில் கால்களாலேயே எழுதத்தொடங்கிய இவர், இப்போது, பல அசாத்திய செயல்களால் உலகினரை வியக்க வைத்து வருகிறார். வணிகவியல் மற்றும், கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர். தன்னுடைய தன்னம்பிக்கை உரைகளை ஒலி-ஒளி குறுந்தகடுகளாக வெளியிட்டுவரும் இவர், Life’s Greater Purpose என்ற குறும்படத்தையும், Life without Limits என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். பல குறும்படங்களிலும் நடித்துவரும் இவர், The Butterfly Circus என்ற படத்துக்காக மூன்று விருதுகளையும் பெற்றுள்ளார். எல்லா மனிதருமே ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களுக்கு பயனாக இருக்க முடியும். யாருமே பயனற்றவர்கள் இல்லை’என்பதையே, என் வாழ்க்கைச் செய்தியாக மற்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்!’ என்கிறார், நிக் உஜிசிக்.
2. மிசிமி இசிமி
11 வயது நிரம்பிய மிசிமி இசிமி என்ற சிறுமி, லாகோஸ் நகர் சாலைகளில் வீசப்படும் குப்பைகளை, ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்து வருகிறார். இவர், தனது ஒன்பதாவது வயதிலேயே, பள்ளிகளில், சிறார்க்கென பசுமை அமைப்பை உருவாக்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த தனது ஆர்வம் பற்றி ஊடகங்களிடம் பேசியுள்ள Misimi அவர்கள், நான் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். லாகோஸ் நகரில் குப்பைகளை அகற்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணியில் இறங்கியுள்ளேன், சுற்றுச்சூழலையும், அதன் மாசுகேட்டினின்று மக்களையும், பாதுகாப்பது எனக்கு மிகவும் பிடித்த செயல், கழிவுப்பொருள்களை வைத்து, அழகான மலர்ச் சாடிகளைத் தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
குழந்தை பருவத்திலேயே வலது கரத்தை இழந்துள்ள சிறுமி மிசிமி இசிமி அவர்கள், ஒரு கரத்தால் ஆற்றிவரும் சேவை, காண்போர் அனைவருக்கும் தூண்டுதலாக அமைந்துள்ளது.
மனதில் கேட்க…
1. நான் எத்தனை நபர்களை உற்சாகப்படுத்தி உயரே கொண்டு சென்றிருக்கிறேன்?
2. உலகில் பிறந்த அனைவரும் பயனுள்ளவர்கள் என்பது இன்று எனக்கு தெளிவாக புரிகிறதா?
மனதில் பதிக்க…
ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்(1தெச 5:11)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா