தலைநிமிர்ந்து நில்லுங்கள், உங்கள் மீட்பு நெருங்கி வருகிறது

திருப்பாடல் 25: 4 – 5ஆ, 8 – 9, 10 & 14

யார் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்? யாருக்கு மீட்பு நெருங்கி வருகிறது? உலகம் எப்படி இருந்தாலும், இந்த உலகப்போக்கிலே வாழாமல், கடவுள் பயத்தோடு ஒரு சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த உலகம் பரிகாசம் செய்கிறது. இப்படி விழுமியங்களோடு வாழக்கூடிய இவர்கள், வாழ்க்கையில் என்ன சாதித்துவிட்டார்கள்? என்கிற ஏளனம் அவர்களது பேச்சில் தெரிகிறது. இப்படி மற்றவர்கள், இந்த உலகப்போக்கின்படி வாழ்கிறவர்கள் பரிகசிக்கிறவர்களை, தலைநிமிர்ந்து நிற்கும்படியும், அவர்களுக்கு மீட்பு அண்மையில் இருக்கிறது என்றும், திருப்பாடல் ஆசிரியர் தெரிவிக்கிறார்.

ஆண்டவருடைய எல்லா நலன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் இந்த திருப்பாடலின் வரிகளில் வெளிப்படுகிறது. இன்றைக்கு பலர் நம்பிக்கையைப் பெறுகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையில் நிலைத்திருக்கிறார்களா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் ஒரு சில துன்பங்கள் வருகிறபோது, துவண்டு போகிறார்கள். வாழ்வின் வேதனையான தருணங்களில் பெற்றிருக்கிற நம்பிக்கையை வெகு எளிதாக இழந்துவிடுகிறார்கள். இது குற்றப்படுத்துவதற்காக அல்ல, மாறாக, யதார்த்தமான உண்மை. இப்படிப்பட்ட துன்பமான தருணங்களில் இறைவனின் அருளுக்காக மன்றாடுவோம். இறைவனின் ஆசீரை வேண்டிநிற்போம் என்று ஆசிரியர் அழைப்புவிடுக்கின்றார்.

இறைவனில் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையில் உறுதியாக இருக்க நாம் முயற்சி எடுக்க வேண்டும் என்பது, இந்த திருப்பாடல் வழியாக நாம் அறிந்து கொள்கிற செய்தி. எத்தகைய இடுக்கண் நம்மை வருத்தினாலும், அவையும் கடந்து போகும் என்கிற நம்பிக்கையை, இறைவன் மீது வைப்போம். வாழ்வில் நல்லது நடக்கும்.

குழந்தை பிறப்பு

ஒரு குழுந்தையின் பிறப்பு சுற்றி வாழக்கூடிய அனைவருக்கும் மகிழ்ச்சியைத்தரக்கூடியதாக இருக்கிறது. இன்றைய நற்செய்தியில் இந்த மகிழ்ச்சியின் செய்திதான் நமக்கு அறிவிக்கப்படுகிறது. எலிசபெத்து ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தார். வயது முதிர்ந்த தருணத்திலும் கடவுளின் இரக்கத்தால் ஒரு குழந்தைக்கு தாயாகக்கூடிய பாக்கியத்தைப் பெறுகிறாள் எலிசபெத்து. அவள் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, அவரோடு சேர்ந்து அவருடைய உறவினர்களும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

இந்த மகிழ்ச்சிக்கு பல காரணங்களை நாம் சொல்லலாம். முதலாவதாக, கடவுளின் வாக்குறுதி நிறைவேறியுள்ளது. எலிசபெத்து முதிர்ந்த வயதில் கருவுற்றிருந்தாலும், அவரைச்சுற்றி வாழ்ந்தோர் அதனை அதிசயமாக எண்ணியிருந்தாலும், குழந்தை பிறக்கக்கூடிய வரையில், நிச்சயம் எலிசபெத்துக்கு மிகப்பெரிய போராட்டம் தான், வாழ்க்கையாக இருந்திருக்கும். முதிர்ந்த வயதில் பெற்றெடுக்கக்கூடிய குழந்தை, தாய்க்கும் சேய்க்கும் எந்தவித ஆபத்துமில்லாமல் இருக்க வேண்டும். கடவுளின் வார்த்தையின்படி அனைத்தும் நடக்க வேண்டும். அதனை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கக்கூடிய அனைவருக்கும், அது விசுவாச அனுபவமாக இருக்க வேண்டும் என்ற போராட்டம் இருந்திருக்கும். இரண்டாவதாக, ஒரு குழந்தையின் பிறப்பு எப்போதுமே இந்த சமுதாயத்திற்கு மகிழ்ச்சிதான். ஓர் உயிர் தோன்றியிருக்கிறது என்கிற உற்சாகம், நிச்சயம் அனைவருக்கும் மகிழ்ச்சியைத்தான் கொடுத்திருக்கும்.

இன்றைக்கு குழந்தைகளை கருவிலேயே அழிக்கக்கூடிய போக்கு, இன்றைய இளைய தலைமுறையினரிடத்தில் அதிகமாக பரவிக்கொண்டிருப்பது வேதனைக்குரியது. ஒரு குழந்தையின் அழுகை பிறக்கிறபோதே கேட்க வேண்டுமே தவிர, கருவிலேயே கேட்பதாக இருக்கக்கூடாது. குழந்தை பிறப்பு, நமக்கு மகிழ்ச்சியின் அனுபவமாக இருக்கட்டும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.