தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்
தியானப்பாடல் சிந்தனை : திருப்பாடல் 111: 1 – 2, 4 – 5, 9, 10
”ஆண்டவரிடத்தில் கொள்ளக்கூடிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்”. ”ஆண்டவருக்கு அஞ்சி நடக்க வேண்டும்”. இது போன்ற வார்த்தைகள் விவிலியத்தில் ஆங்காங்கே காணக்கிடப்பதை நாம் பார்க்கலாம். இன்றைய திருப்பாடலின் வரிகளும் இதையே வலியுறுத்திக் கூறுகின்றன. ஆண்டவருக்கு அஞ்சி நடப்பது என்றால் என்ன? நாம் ஏன் ஆண்டவருக்கு அஞ்சி நடக்க வேண்டும்? கடவுள் நமக்கு தந்தையும், தாயும் என்று விவிலியம் சொல்கிறது. உரிமையோடு அவரிடத்தில் கேட்கலாம் என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அப்படியிருக்கிற சமயத்தில், எதற்காக, நாம் கடவுளுக்கு பயப்பட வேண்டும்.
அச்சம் என்கிற வார்த்தையை நாம் புரிந்து கொள்வதில் தான், சற்று தடுமாறுகிறோம். அதனுடைய உண்மையான விவிலிய அர்தத்தை நாம் உணர்ந்து கொண்டால், நிச்சயம் அதைப்பற்றிய தெளிவு நமக்குக் கிடைக்கும். இணைச்சட்டம் 8: 6 சொல்கிறது: ”உங்கள் கடவுளாகிற ஆண்டவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். அதுவே அவர் தம் வழிகளில் நடந்து, அவருக்கு அஞ்சி வாழ்வதாகும்”. இங்கே கொடுக்கப்பட்டிருக்கிற இறைவார்த்தையை நாம் பார்த்தோமென்றால், கடவுளுக்கு பயந்து வாழ்வது என்பது, இந்த உலகம் புரிந்து கொள்வது போன்ற பயம் கிடையாது. மாறாக, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதுதான், அவருக்கு அஞ்சி வாழக்கூடிய வாழ்வாகும். அவருடைய கட்டளை என்ன கட்டளை? அதுதான், மத்தேயு 7: 12 ல் பொன்விதியாகச் சொல்லப்படுகிறது. ”பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம், நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்”. மற்றவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதை நாம் மற்றவர்களுக்குச் செய்வதுதான், கடவுள் கொடுத்த அன்புக்கட்டளை. இந்த கட்டளையைக் கடைப்பிடித்தால், ஆண்டவரின் ஆற்றலை, வல்லமையை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இங்கே உணவு என்று சொல்லப்படுவது, கடவுளின் வல்லமையைக் குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கிறது.
நமது வாழ்வில் நாம் மற்றவர்களை அன்பு காட்டுகிறவர்களாக, மற்றவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து நடக்கிறவர்களாக மாற வரம் வேண்டி, ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
Amen!