தந்தையைப் போல மகன் !
1. “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார், நானும் செயலாற்றுகிறேன்” என்னும் வாக்கிலிருந்து ஓய்வுநாளிலும் இறைவன் செயல்படுவதைச் சுட்டிக்காட்டி, அவ்வாறே ஓய்வுநாளிலும் தாம் மீட்பின் பணியைச் செய்வதாக இயேசு வாக்குமூலம் தருகிறார். நாமும் நற்பணியாற்றுவதிலும், நேர்மையானவற்றைச் செய்வதிலும், ஓய்வின்றி உழைக்க வேண்டும்.
2. “தந்தை செய்பவற்றையே மகனும் செய்கிறார்”. தந்தை இறைவன் தமது பேரன்பை, பேரிரக்கத்தை மீட்புச் செயல்களாக வெளிப்படுத்துகிறார். அவ்வாறே, இயேசுவும் பாவங்களை மன்னிப்பது, நோயிலிருந்து நலமளிப்பது போன்ற செயல்களை அல்லும் பகலும் ஆற்றிவந்தார். நாமும் இத்தகைய பணிகளை, மாந்தரை இறைவனுடனும், மனிதருடனும் ஒப்புரவாக்கும் பணியை எப்போதும் ஆற்றவேண்டும்.
3. “தந்தை தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பதுபோல, மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்”. இயேசுவிடம் வந்தவர்கள் சாவிலிருந்து விடுதலைபெற்று, புதுவாழ்வைப் பெற்றுக்கொண்டனர். நாமும் வாழ்வின் வழிகாட்டிகளாகத் திகழவேண்டும்.
4. “தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது, ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்” என்னும் சொற்களிலிருந்து, இயேசுவின் தீர்ப்பு நீதியானது என்பதை உணர்கிறோம். நாமும் நியாய உணர்வு மிக்கவர்களாய், நன்மை, எது தீமை என்பதை அறிந்தவர்களாய், ஞானம் நிறைந்தவர்களாய் வாழ இறையருள் வேண்டுவோம்.
மன்றாடுவோம்: உயிர்த்த மாட்சி மிகு இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது சீடர்கள் அனைவருக்கும் நீர் வழங்கிய தூய ஆவி என்னும் கொடையை எங்களுக்கும் தந்து, நாங்கள் விடுதலை அனுபவம் பெற அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
– பணி குமார்ராஜா