தடைகளைத்தகர்த்தெறிவோம், இறையரசுக்கு தகுதிபெறுவோம்
இயேசுவின் காலத்தில் தொழுகைக்கூடங்களில் குறிப்பிட்ட நபர்தான் போதிக்க வேண்டும் என்ற ஒழுங்கு ஒன்றுமில்லை. அந்த தொழுகைக்கூடத்தின் தலைவர் வந்திருக்கிறவர்களில் நன்றாக போதிக்கக்கூடியவர் யாருக்கும் அந்த வாய்ப்பைத்தரலாம். இயேசுவுக்கு அங்கே போதிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததில் வியப்பேதுமில்லை. ஏனெனில், இயேசுவை மக்கள் சிறந்த போதகரென ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இயேசுவின் போதனையைக்கேட்டு அவருடைய சொந்த ஊர் மக்களும் வியந்துபார்த்தனர். ஆனாலும் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். காரணம் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு பல தடைகள் இருந்தது.
இயேசுவின் குடும்பப்பிண்ணனி, இயேசுவின் கல்வியறிவு பற்றிய சந்தேகம், இயேசு அவர்களில் ஒருவராக இருந்ததால், அவரைப்பற்றிய குறைவான மதிப்பீடு போன்றவை இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருந்தவைகளாகும். நல்லது என்று தெரிந்திருந்தும், நம் கண்முன்னே இதுபோன்று இருக்கக்கூடிய தடைகள் அதை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருந்தது. இதனால் இழப்பு என்னவோ நமக்குத்தான். அதை உணர்ந்து, நன்மையின் பக்கம் நாம் துணைநிற்போம். நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்வோம்.
எனது வாழ்வில் நன்மையின் பக்கம் நிற்காமல் இருப்பதற்கு எவை எவை எனக்கு தடைக்கற்களாக இருந்திருக்கிறது? என சிந்தித்துப்பார்ப்போம். தடைகளைக் கடந்து செல்வதற்கு இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்