செல்வம் என்னும் பொறுப்பு
லூக்கா நற்செய்தியாளரின் பல நல்ல சிந்தனைகளுள், முக்கியமானது செல்வத்தைப் பற்றிய அவரது கருத்தாக இருக்கிறது. செல்வத்தைப்பற்றியும், செல்வந்தர்களைப் பற்றியும், அதிகமாகச் சொல்கிறவர் லூக்கா நற்செய்தியாளர் என்றால், அது மிகையாகாது. லூக்கா நற்செய்தியை அனைவரையும் அனைத்துச் செல்கின்ற நற்செய்தி. ஏழைகளுக்கு ஆதரவு சொல்லும் அவர், செல்வந்தர்களையும் விட்டுவிடுவதில்லை. அவர்களின் குற்றங்களை, அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார். அதே வேளையில், அவர்களின் வாழ்வுக்கான வழியையும் காட்டுகிறார். அதன் ஒரு பகுதிதான் நாம், இன்று வாசிக்கக்கேட்ட நற்செய்திப் பகுதி.
செல்வத்தைப் பல வழிகளில் நாம் பயன்படுத்தலாம். நமக்கும் பயன்படுத்தலாம். மற்றவர்கள் பயன்பெறக்கூடிய வகையிலும் பயன்படுத்தலாம். எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான், நமது மீட்பு அடங்கியிருக்கிறது என்பதை, நற்செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார். செல்வம் என்பது கடவுளால் கொடுக்கப்படுகிற வெறும் ஆசீர்வாதம் மட்டுமல்ல, மாறாக, அது மிகப்பெரிய பொறுப்பு. செல்வந்தர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அவர்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது, என்பது நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள். அது வெறும் வார்த்தையல்ல. வாழ்வியல் தத்துவம். அந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டால், நமது வாழ்வு நிச்சயம் மகிழ்ச்சியானதாக இருக்கும்.
இன்றைக்கு செல்வம் வருகிறபோது, கடவுளின் ஆசீர்வாதம் தங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று மேலோட்டமாகப் புரிந்து கொள்வது தவறு. அது ஆசீர்வாதம் மட்டுமல்ல, அது மிகப்பெரிய பொறுப்பு என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது, நாம் கடவுளுக்குரிய வாழ்வை வாழ முடியும்.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்