செபிக்கும் மனநிலை
பரிசேயர் மற்றும் வரி தண்டுபவரின் செபத்தைப்பற்றிய ஓர் ஆய்வை இயேசு மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சி வாயிலாக, நமது செபம் எப்படி இருக்கக்கூடாது? மற்றும் எப்படி இருக்க வேண்டும்? என்கிற செய்தியையும் அவர் நமக்குத்தருகிறார். பரிசேயன் ஆலயத்திற்குச் சென்றது செபிப்பதற்காக அல்ல, மாறாக தன்னைப்பற்றிப் புகழ்வதற்காகத்தான் என்பது அவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது. ஒருவன் எப்படி? என்பது அவன் சொல்லித்தான் கடவுளுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. பரிசேயன் சொன்னது அனைத்தும் உண்மைதான். அவன் சொல்லாவிட்டாலும் கடவுளுக்குத் தெரியும். எனவே, நம்மைப்பற்றிப் பெருமைபாராட்டுவதில் நாம் நேரத்தைச் செலவழிக்கத் தேவையில்லை.
வரிவசூலிக்கிறவர் தனது நிலையை எண்ணிப்பார்க்கிறார். தனது வாழ்வைச் சிந்தித்துப்பார்க்கிறார். தான் இதுநாள் வரை நடந்துவந்த அந்தப் பாதையை பின்னோக்கிப்பார்க்கிறார். தான் பாவி என்பதை உணர்கிறார். கடவுளுக்கேற்ற வாழ்வு தான் வாழவில்லை என்பதை அறிகிறார். தனது தவறுக்காக மனம்வருந்துகிறார். நேர்மையான முறையில் வாழ, அவர் இறைவனின் மன்னிப்பிற்காக, அருளுக்காகக் காத்திருக்கிறார். செபம் என்பது நமது வாழ்வை கடவுள் முன்னிலையில் திறந்த புத்தகமாக ஆய்வு செய்யக்கூடிய அருமையான நேரம். நமது வாழ்வைச் சிந்தித்துப்பார்ப்பது, சீர்தூக்கிப்பார்ப்பது மற்றும் நல்ல வாழ்வு வாழ உறுதி எடுப்பது. மற்றவர்களைப்பார்க்காமல் நமது வாழ்வை நாம் எண்ணிப்பார்த்தாலே, உலகத்தில் பாதிப்பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
நமது செபம் எப்படி இருக்கிறது? நாம் செபிக்கும்போது எப்படிப்பட்ட மனநிலையோடு செபிக்கிறோம்? நம்மைப்புகழ்வதையும் நாம் செய்கிற நல்ல காரியங்களையும் வைத்து, நமது வாழ்வைப்பற்றிப் பேசுவதிலே நமது நேரத்தைச் செலவிட்டால், அது உண்மையான செபமாக இருக்காது. மாறாக, நமது வாழ்வை ஆராய்வதற்கான நல்ல முயற்சியாக இதை நினைப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்