சிலுவையிலே தான் மீட்பு உண்டு
இயேசுவைப் பொறுத்தவரையில் அவருக்கு வாழ்வின் உச்சகட்டம் சிலுவை. சிலுவையில் தான் மீட்பு, சிலுவை தான் முடிவில்லாத வாழ்வைப்பெற்றுத்தரப்போகிறது என்பதை அவர் முழுமையாக நம்பினார். யோவான் 12: 23 ல் வாசிக்கிற, “மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்கிற இறைவார்த்தை இதை வலியுறுத்துவதாக அமைகிறது. சிலுவைக்கும், மீட்புக்கும் உள்ள தொடர்பைப்பற்றி இயேசு தொடர்ச்சியாக பல இடங்களில் பேச வேண்டிய அவசியம் என்ன? அதனுடைய அர்த்தம் என்ன?
வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோம் என்றால், வரலாற்றிலே இடம் பிடித்திருக்கிற சரித்திர நாயகர்களுக்கு இறப்புதான் இந்த அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. சரித்திரத்தில் இடம்பெற்ற மனிதர்களில் பலர் உயிர் வாழ்ந்தபோது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவும் இல்லை. புகழ் பெறவும் இல்லை. ஆனால், அவர்கள் தழுவிய மரணம் தான் அவர்களின் பெயர்களை சரித்திரத்தில் இடம்பெறச்செய்து, அவர்களுக்கு வரலாற்றில் தனி இடத்தைப்பெற்று தந்திருக்கிறது. இயேசு இறந்தபோது கூட நூற்றுவர் தலைவன் ஒருவர் ‘உண்மையிலே இவர் இறைமகன் தான்’ என்று சொன்னதும் இதை உறுதிப்படுத்துகிறது (மத்தேயு 27: 54). இயேசு சிலுவையை தன் தந்தை தனக்கு கொடுத்த பொறுப்பாக ஏற்றுக்கொண்டார். எனவேதான், அந்த சிலுவையை சுமப்பது தந்தையின் திட்டத்தை நிறைவேற்ற உதவியாக இருக்கும் என்று நம்பினார். அந்த சிலுவையைத் தாங்குவதன் வாயிலாக இந்த உலகத்திற்கு மீட்பைக்கொண்டு வரமுடியும் என்று நினைத்தார். அதற்காக, சிலுவையையும், மீட்பையும் இயேசு இணைத்துப்பேசுகிறார். தொடர்ந்து பேசுகிறார். சிலுவையின் வழியாக நிச்சயம் மீட்பு உண்டு என்பதில் இயேசு ஒருபோதும் சந்தேகப்பட்டது கிடையாது.
நம்முடைய வாழ்வில் சங்கடங்கள் வருகின்றபோது, அதன் வழியாகக்கூட கடவுள் நம்மோடு பேசலாம். அந்த துன்பத்தின் வழியாக அவர் நமக்கு ஏதாவது ஒரு செய்தியைச் சொல்ல விரும்பலாம். அதன் வழியாக நமக்கு மீட்பு கூட கிடைப்பதற்கு வழிவகை செய்யலாம். நம்முடைய வாழ்வில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், துன்பத்தை கடவுளின் சாபமாகப் பார்க்காமல், அதன் வழியாக நாம் கற்றுக்கொள்ளும் செய்தியைக் கண்டுபிடிப்போம்..
~ அருட்பணி. தாமஸ் ரோஜர்