சிக்க வைக்கும் புகழ்ச்சி!
பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, “போதகரே, நீர் உண்மையுள்ளவர். ஆள் பார்த்து செயல்படாதவர். எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று சொல்லி, வரி செலுத்துவது முறையா, இல்லையா என்று கேட்டனர்.
இந்த நிகழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் எளிய பாடங்கள்:
1. புகழ்ச்சியிலும் சிக்கல் இருக்கிறது. பாராட்டுவதற்குப் புகழ்கிறவர்களும் இருக்கிறார்கள், சிக்க வைப்பதற்காகப் புகழ்கிறவர்களும் இருக்கிறார்கள்.
2. போலியான புகழ்ச்சியில் மயங்கிவிடக்கூடாது. இயேசு பொய்யான புகழ்ச்சியைப் புரிந்துகொண்டார். “அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு” என்று எழுதியுள்ளார் மாற்கு. எனவேதான், “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்.
3. உள்நோக்கமின்றிப் பிறரைப் புகழவேண்டும். நமது பாராட்டுகள் நேர்மையானதாக அமையட்டும்.
மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் பாராட்டுரைகள் உறவை வளர்ககும் வகையில் அமைய அருள்தாரும், ஆமென்.
~ அருள்பணி. குமார்ராஜா