சட்டத்தை அனைவருக்கும் சமமாக்குவோம்
ஓய்வுநாள் என்பது எபிரேய மொழியின் “ஷாவத்” என்கிற வார்த்தையின் பொருளை மையப்படுத்தியதாகும். அதன் பொருள் “இளைப்பாறுதல்”, ”தவிர்த்தல்”, ”ஓய்வெடுத்தல்” என்பதாகும். யூதர்களின் ஓய்வுநாள் என்பது வெள்ளிக்கிழமை மாலை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை மாலை சூரிய மறைவு வரை இருக்கும். கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள். ஏனென்றால், அன்றைய தினம் நம் ஆண்டவரின் உயிப்புநாள். இந்த ஓய்வுநாளில் செய்யக்கூடாதவை என்று, யூதர்களின் மறைநூல் அறிஞர்கள் பல ஒழுங்குமுறைகளை வகுத்திருந்தனர். இந்த ஒழுங்குகளில் ஒன்றுதான் இன்றைய நற்செய்தியில் வரும் ஓய்வுநாளில் கதிர்கொய்தல் பற்றியது ஆகும்.
அடுத்தவருக்கு சொந்தமான வயலில் கதிர்களைப்பறிப்பது தவறானது அல்ல. அது ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டது. அரிவாளால் பறிக்காதவரைக் குற்றமில்லை. எனவே, சீடர்களின் இந்த செயல் நியாயமானதாக, ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டதாக இருந்திருக்கும். ஆனால், அவர்கள் கதிர்களைப்பறித்தது ஓய்வுநாளில். அதுதான் ஒழுங்குமுறைகளுக்கு எதிரானது. இதைத்தான் பரிசேயர் குற்றப்படுத்துகின்றனர். சீடர்களுக்கும் இது நன்றாகத்தெரியும். இருந்தும் அவர்கள் அதைப்பறிக்கிறார்கள் என்றால், அதற்குக்காரணம், தாங்கமுடியாத பசி. பொறுத்து, பொறுத்துப் பார்த்துதான் சீடர்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள். நமது வழக்கிலே, ”ஆபத்திற்கு பாவமில்லை” என்ற ஒரு சொல்லாடல் பயன்படுத்தப்படும். இதைத்தான் சீடர்கள் செய்கிறார்கள்.
சட்டத்தை மீறுவது பாவம். ஆனால், ஒட்டுமொத்தமாக நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. இன்றைக்கு அதிகாரமிக்கவர்கள் பணத்தால், பதவியால், அதிகாரத்தால் சட்டத்தில் காணப்படும் ஓட்டைகளைப்பயன்படுத்தி குற்றத்திலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். ஆனால், சாதாரண ஏழைகளை சட்டத்திற்கு பலிகடாவாக மாற்றிவிடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். சட்டத்தை ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் நீதி கிடைப்பதற்காகப் பயன்படுத்த வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்