குழந்தைகள் கற்றுத்தரும் பாடம்
விண்ணரசில் மிகப்பெரியவர் யார்? என்ற கேள்விக்கு, இயேசு ஒரு சிறு பிள்ளையை அழைத்து, நடுவில் உதாரணமாக நிறுத்தி, சிறுபிள்ளைகளைப் போல மாறுகிறவர்கள் தான் விண்ணரசில் பெரியவர் என்று பதில் சொல்கிறார். சில பாரம்பரியத்தின்படி, அந்த சிறுகுழந்தை அந்தியோக்கு இஞ்ஞாசியார் என்று சொல்வர். ஏனென்றால், அந்தியோக்கு இஞ்ஞாசியாருக்கு “தியோபோரஸ்” என்ற பெயர் உண்டு. அதன் பொருள் “கடவுள் தூக்கினார்” என்பதாகும். அதே போல, இயேசு அழைத்த குழந்தை பேதுருவுடையது என்றும் ஒரு சிலர் சொல்வர். காரணம், வழக்கமாக கேள்விகளைத் துணிவோடு இயேசுவிடம் கேட்பது பேதுரு தான். பேதுருவிற்கு திருமணம் ஆகியிருந்ததால், அவருடைய குழந்தையாகக்கூட இருக்கலாம் என்றும் சொல்வர்.
குழந்தைகளிடத்திலே இருக்கக்கூடிய பல குணங்கள், பெரியவர்களிடத்தில் இருந்தால், நிச்சயம் இந்த உலகம் ஒரு அமைதிப்பூங்காவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. புதிதானவற்றைப் பார்க்கிறபோது, அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல், எது நடந்தாலும், தங்களுக்கு எதிராக எவர் தீங்கிழைத்தாலும், அதை உடனடியாக மறந்து விடுவது, மன்னித்துவிடுவது, திறந்த உள்ளத்தோடு, தூய்மையான உள்ளத்தோடு எவரையும் ஏற்றுக்கொள்வது என, பல நல்ல குணங்களை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். அந்த நல்ல குணங்கள் தான், விண்ணரசில் நம்மை பெரியவர்களாக நிலைநிறுத்துவதற்கான குணங்களாகும்.
இன்றைக்கு பகைமை உணர்வும், வெறுப்புணர்வும், யார் பெரியவர்? என்கிற மனநிலையும் மக்கள் மனதில் அதிகமாக இருக்கிறது. அவை மறைவதற்கு நாம் குழந்தைகளின் பண்புகளை நமதாக்க வேண்டும் என்ற இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்குவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்