கரிசணையோடு காவல் செய்வோம்…
காவல்தூதர்கள் திருவிழா
மத்தேயு 18:1-5.10
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
இன்று அன்னையாம் திருச்சபை காவல் தூதர்களின் விழாவைக் கொண்டாடுகின்றது. கடவுள் தான் படைத்த ஒவ்வொரு மனிதரையும் பாதுகாத்து வழிநடத்தும்படி காவல் தூதரை ஒவ்வொருவருக்கும் துணையாகக் கொடுத்துள்ளார் என்பது எமது கத்தோலிக்க மரபிலான நம்பிக்கையாகும். கடவுள் ஒவ்வொரு நாளும், நம்மைக் காக்கின்றார் என்பதும், கடவுள் எப்பொழுதும் நம்மைக் கண்காணிக்கின்றார் என்ற உண்மையும் இதிலிருந்து நன்கு விளங்குகின்றது. காவல்தூதர்களின் வல்லமையை உணர்ந்த புனிதர்களின் கூற்று இதோ:
1. தூய அகுஸ்தீனார்
“கடவுளின் குரலாக இந்தக் காவல் தூதர்கள் இருந்து செயற்படுகின்றார்கள். நாம் கடவுள் விரும்பியதைச் செய்கின்றபோது நம்மைத் தட்டிக் கொடுத்து மனதிலே நிறைவான மகிழ்ச்சியைக் கொடுத்து அவர்களும் மகிழ்ந்து களிகூர்கின்றார்கள். நாம் கடவுளைவிட்டு விலகிச் செல்ல முற்படுகின்றபோது அவரது குரலாய் இருந்து நமக்குத் துணையாகக் கடவுளால் கொடுக்கப்பட்ட காவல்தூதர்கள் நம்மைத் தடுத்து நிறுத்துகின்றார்கள். இதை நானும் உரிய நேரத்தில் உணரவில்லையே. என் காவல் தூதர்களின் கரங்களை உதறிவிட்டுச் சென்றேனே” என்று கூறுகின்றார் தூய அகுஸ்தீனார்.
2. தூய அவிலா தெரேசம்மாள்
ஆண்டவரின் வழியிலே நடந்து, அவரின் விருப்பத்தை நிறைவேற்றி, அவர் முன்னிலையிலே தம்மை ஒப்புவிப்பவர்களை ஆண்டவர் காக்கும் பொருட்டு “தன்னுடைய தூதர்களுக்கு கட்டளையிடுவார். எந்த தீங்குகளோ, வாதைகளோ அவர் கூடாரத்தை நெருங்காது” என்றும் ஆண்டவர் வாக்குறுதி கொடுக்கின்றார்.” நீ எங்கு சென்றாலும், எவ்வேளையிலும், உன் துன்ப நாட்களிலும், துயரமான தருணங்களிலும், என் காவல் தூதரே எனக்குத் துணையாக வாருங்கள் என் ஆண்டவரின் விருப்பத்தை சொல்லித் தாருங்கள் என்று உன் கண்களை மூடி, இதயத்தில் நினைத்துக் கொள். அப்பொழுது அவர்கள் உனக்கு உதவுவார்கள்” என்கின்றார் தூய அவிலா தெரேசம்மாள்.
அன்புமிக்கவர்களே! காவல்தூதர்கள் திருவிழா தித்திப்போடு இரண்டு செய்திகளை நம் காதுகளில் தெளிவாய் கேட்கும்படியாய் சத்தமாக சொல்கிறது. அதை கவனமாய்க் கேட்டு கடைப்பிடிப்போம்.
கடவுள் நம்மீது அக்கறை கொண்டு காவல் செய்கிறார்
கடவுள் நம் மீது அக்கறை கொண்டவர். நம்மை சீராக்க வேண்டும், சீர்ப்படுத்த வேண்டும் என்பது அவரின் அதிக ஆசை. அதற்காக அவர் காவல்தூதர்களை நமக்கு தந்திருக்கிறார். காவல்தூதர்களை நாம் பார்க்கும்போதெல்லாம் கடவுளின் அக்கறை நமக்கு தெளிவாய் விளங்குகிறது. கடவுளின் பாதுகாவல் நமக்கு விளங்குகிறது.
நாமும் நம்மவர்களை அக்கறையோடு காவல் செய்வோம்
கடவுள் நம்மை காக்கின்றார். ஆகவே காவல்தூதர்களை தந்திருக்கின்றார். தந்த கடவுள் நம்மையும் காக்கின்ற பணியை செய்ய சொல்கிறார். அக்கறையோடு அடுத்தவரைக் காக்கின்ற, காவல் செய்கின்ற பணியை நாம் செய்ய சொல்கிறார். செய்வோம். காவல் தூதர்களாய் மாறுவோம்.
மனதில் கேட்க…
1. இனி தவறான செயலை செய்யும்போது காவல்தூதர்களின் குரலைக் கேட்டு அதைச் செய்யாமல் இருக்கலாமா?
2. அடுத்தவரை அக்கறையோடு காவல் செய்து அவரின் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கலாமா?
மனதில் பதிக்க…
நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார் (திபா 91:11)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா