கடவுள் கொடுத்திருக்கிற வாழ்வு
இந்த உவமையை இயேசு மக்களுக்குச் சொன்னபோது, ஏற்கெனவே யூதப்போதகர்கள் சொன்ன இரண்டு கதைகள், மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. முதல் கதை: ஓர் அரசர், முக்கியமான அலுவலர்களுக்கு, விரைவில் தான் விருந்து ஏற்பாடு செய்ய இருப்பதாகவும், அதற்கு எந்த நேரமும் தயாராக இருக்கும்படியும், சொன்னார். விருந்திற்கு எப்படி வர வேண்டும் என்பதையும் அவர்களுக்கு அறிவித்திருந்தார். முன்மதியுள்ள அலுவலர்கள், அரசரின் இந்த செய்திக்கு ஏற்ப, தங்களையேத் தயாரித்து, அரசரின் அழைப்பிற்காகக் காத்திருந்தனர். ஆனால், முன்மதியற்றவர்கள், விருந்திற்கு இன்னும் நாளாகலாம் என்று, தங்களின் அலுவல்களைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். திடீரென்று அழைப்பு வந்தபோது, ஞானமுள்ளவர்கள் தகுந்த தயாரிப்போடு, விருந்திற்கான ஆடை உடுத்திச் சென்றனர். முன்மதியற்றவர்களோ, தயாரிப்பில்லாமல் சென்றனர். அவர்கள் விருந்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர். ஆக, நாம் எப்போதும், கடவுளின் அழைப்பிற்குத் தயாரிப்போடு இருக்க வேண்டும் என்கிற கருத்தை, இது வலியுறுத்திக்கூறுகிறது.
இரண்டாவது கதையும் இதை அடியொற்றித்தான் இருந்தது. ஓர் அரசர் தனது பணியாளர்களுக்கு விலையுயர்ந்த அரண்மணை ஆடைகளைப் பரிசாகக் கொடுத்தார். அறிவுள்ள பணியாளர்கள், அரசர் கொடுத்த ஆடையை நல்லமுறையில் பாதுகாப்போடு பத்திரப்படுத்தி வைத்தனர். அறிவிலிகள் அந்த ஆடைகளைப் போட்டுக்கொண்டு, அதை பழையதாக்கினர். திடீரென்று ஒருநாள், அரசர் தான் கொடுத்த ஆடைகளை திரும்பக்கேட்டார். அறிவுள்ளவர்கள் தங்களிடம் கொடுக்கப்பட்டவாறே புதியதாகத் திருப்பிக்கொடுத்தனர். அறிவிலிகளோ கிழிசல் ஆடைகளைக் கொடுத்தனர். அரசர் கோபம் கொண்டு, அவர்களை சிறையில் தள்ளினார். ஆக, கடவுள் கொடுத்த ஆன்மாவை, தூய்மையாக நாம் அவரிடத்தில் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிற கதைதான் இது. இயேசு இந்த இரண்டு கதைகளையும் ஒன்று சேர்த்து, புதிய உவமையாக மக்களுக்குத்தருகிறார். இயேசு வலியுறுத்தும் கருத்தும் இதுதான். கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற வாழ்க்கையை, மகிமையோடு, மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு வாழ வேண்டும் என்பதுதான்.
கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற வாழ்வை நாம் எப்படி வாழ்கிறோம்? என்று நாம் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். இந்த வாழ்வை வாழ்வது நாமாக இருந்தாலும், அதைப் பரிசாகக் கொடுத்த கடவுளுக்கு நாம் கடன்பட்டவர்கள். அந்த நன்றியை வாழ்வை நல்ல முறையில் வாழ்வதன் மூலம், நாம் நிரூபிக்க வேண்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்