கடவுளுக்கான காணிக்கையை செலுத்தி விட்டீர்களா?
மாற்கு12:13-17
நம் வாழ்க்கையை திறனாய்வு செய்து பார்க்கின்ற போது ஒரு உண்மை புலனாகிறது. அந்த உண்மை என்னவெனில் கடவுள் நமக்கு கொடுப்பதில் கணக்குப் பார்ப்பதில்லை. எப்படி இருந்த நான் இப்படி இருக்கிறேன்? இந்த கேள்வியை கேட்டுப் பார்த்தீர்களா? நம்முடைய உடல் ஆரோக்கியம், பொருளாதாரம், கல்வி மற்றும் வாழ்கைத்தரம் இவைகளில் எவ்வளவோ வளர்ந்திருக்கிறோம். இன்னும் கடவுள் நம்மை விசேசமாய் உயர்த்தப் போகிறார் என்பதை எல்லாம் நினைக்கும் போது என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகிறது என்று பாடிய அன்னை மரியாளோடு சேர்ந்து பாடத் தோன்றுகிறது.
இத்தனையையும் இனிதே இன்முகத்தோடு குறித்த நேரத்தில் அருவியாய் பொழியும் ஆண்டவருக்கு நான் கொடுப்பது என்ன? என்ற கேள்வியைக் கேட்க சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடவுளுக்கு உரியதை கடவுளுக்கு கொடுங்கள் என்கிறார். ஒரு சிலருக்கு கடவுளுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது.
இதோ உங்களுக்கான இரண்டு பதில்கள்:
1) நம்மிடம் கொடுக்கும் உள்ளம் இருக்கிறதா என கடவுள் தேடி பார்ப்பார். அத்தனையும் அளக்காமல் அனைத்து நேரங்களிலும் கொடுத்தேனே? இவர்களிடம் கொடுக்கும் உள்ளம் இருக்கிறதா என கடவுள் பார்க்கிறார். முதலில் தனக்கு கொடுப்பதில் எப்படி இருக்கிறார்கள் என்றும் கடவுள் பார்க்கத் தவறுவதில்லை.
2) திருச்சபையில் ஆண்டவருக்கான பணிகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமெனில் நாம் கொடுப்பது மிக மிக அவசியம். திருச்சபையின் பணிகளுக்கு கொடுக்க வேண்டியது யார்? ஒவ்வொரு கத்தோலிக்க கிறிஸ்தவனும் கிறிஸ்தவளும். நாம் கொடுக்காமல் யார் கொடுப்பது?
ஆகவே ஆண்டவரில் அன்பார்ந்தவர்களே! இந்த இரண்டும் உங்களுக்கு தெளிவாய் விளங்கி விட்டதா? கடவுளுக்கு காணிக்கைள் கொடுக்க ஒருபோதும் உங்கள் மனதை சுருக்கிக்கொள்ள வேண்டும். மனதை விரியுங்கள். கடவுளின் விரிந்த ஆசீர்வாதத்திற்குள் உங்கள் குடும்பங்களை கொண்டு வாருங்கள்.
மனதில் கேட்க..
1) ஞாயிற்றுக்கிழமை காணிக்கை போடும் பழக்கம் என் குடும்பத்திற்கு உண்டா?
2) நன்கொடைகள் கடவுளுக்காக கொடுக்கும் போது மனம் சுருங்குகிறதா? அல்லது விரிந்து கொடுக்கிறதா?
மனதில் பதிக்க…
ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்(திபா105:5)
– அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா