கடவுளின் நீதி
வாழ்க்கையில் நமது நினைப்பின்படி நிகழ்வுகள் நடக்கிறபோது, நமக்குள்ளாக கர்வம் குடிகொள்ள ஆரம்பித்துவிடுகிறது. அதன் விளைவாக, ஆணவமும், தலைக்கனமும் சேர்ந்து, கடவுளுக்கு நிகர் நான், என்கிற மனநிலை நமக்குள் குடிகொள்ள ஆரம்பித்து விடுகிறது. அந்த நினைப்பு வருகிறபோது, நாம் அழிய ஆரம்பித்து விடுகிறோம். இன்றைய வாழ்வில் பெரும்பாலான பணமுதலைகளின் வாழ்வு, இப்படிப்பட்ட வாழ்வாகத்தான் இருக்கிறது என்பதை, இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது.
தோட்டத்தொழிலாளர்கள் அந்த தோட்டத்தின் பலனை ருசிகண்டு விட்டார்கள். “ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா?” என்கிற சொல்லாடலுக்கு ஏற்ப, அனைத்துமே தாங்கள் நினைத்தது போலத்தான் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இனியும் தாங்கள் நினைப்பது போலத்தான் நடக்கும், என்ற ஆணவமும், தலைக்கனமும் அந்த தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. இதுதான் அழிவின் தொடக்கம். கடவுள் நாம் தவறு செய்கிறபோது, நம்மை தண்டிப்பதற்கு காலம் தாழ்த்துகிறார் என்றால், அது அவருடைய இரக்கத்தின் உன்னத்தை, ஆழத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. அதனை நாம் நமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, அதனை தவறாகப் பயன்படுத்துகிறபோது, அழிவைச் சந்திக்கிறோம் என்பதுதான், இன்றைய நற்செய்தி நமக்கு தரும் செய்தி.
கெட்டவர்கள் ஏன் இந்த உலகத்தில் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு அழிவே கிடையாதா? தண்டனை கிடையாதா? இதுபோன்ற கேள்விகளுக்கு, அழிவு நிச்சயம் என்கிற பதிலைத்தருவதுதான் இன்றைய நற்செய்தி. நாம் எப்போதும், நமக்கு நேரமும், காலமும் கொடுக்கப்படுகிறபோது, அதனை சரியான முறையில் பயன்படுத்தி, வாழ்வை திருத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிவு நிச்சயம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்