”கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” (லூக்கா1:37)
கிறிஸ்து பிறந்த விழாவை டிசம்பர் மாதம் 25ஆம் நாம் கொண்டாடுகிறோம். அதற்கு சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்னர், மார்ச் 25ஆம் நாள், இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியைத் திருச்சபை நினைவுகூர்கிறது. கடவுளின் தூதர் மரியாவிடம் சென்று, அவர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவார் என அறிவிக்கிறார் (லூக் 1:26-33). திருமண ஒப்பந்தம் ஆகியிருந்தும் கணவரோடு கூடி வாழாதிருந்த மரியா, ”இது எப்படி நிகழும்?” என்று கேட்ட கேள்விக்கு வானதூதர் அளித்த பதில்: ”கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” (லூக் 1:37) என்பதாகும். மனிதர் பல திறமைகளைப் பெற்றிருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய திறமைக்கு ஒரு எல்லை உண்டு. எவ்வளவுதான் அறிவுத் திறன் கொண்டிருந்தாலும் மனிதரால் கூடுமான சாதனைகள் அளவுக்கு உட்பட்டவையே. ஆனால் ”கடவுளால் எல்லாம் கூடும்”. இவ்வாறு கடவுள் வல்லமை மிக்கவர் என நாம் கூறும்போது இரு அடிப்படையான உண்மைகளை வலியுறுத்துகின்றோம். முதலில், கடவுள்தாம் நம்மை உருவாக்கியவர். எனவே, நாம் கடவுளின் படைப்புகள் என்பதாலும் கடவுள் நம்மைப் படைத்தவர் என்பதாலும் மனிதர் ஒருபோதுமே கடவுளைப் போல வல்லமை மிக்கவர்களாக மாறிட இயலாது. இரண்டாவது, கடவுள் விரும்பினால் நம்மை மனித நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல இயலும். இதையே நாம் மீட்பு என்கிறோம். அதாவது, கடவுள் நம்மீது இரக்கம் கொண்டு, தம் ஒரே மகனை நம் மீட்பராக அனுப்பி, நம்மைத் தம் வாழ்வில் நிறைவாகப் பங்குபெற அழைத்துள்ளார். இது கடவுள் ஆற்றிய அரும்செயலாகும்.
எனவே, மனிதரால் இயலாதது ஒன்றுமில்லை என நாம் கூறலாமா? கடவுளின் அருளை நாம் பெறும்போது நாம் கடவுளின் நிலைவாழ்வில் பங்கேற்பதால் நாம் ஒருவிதத்தில் கடவுள் தன்மையைப் பெறுகிறோம். இதனால் மனித நிலை தன் நிறைவைப் பெறுகிறது. நாமும் கடவுளின் வல்லமையால் திடம் பெறுகிறோம். எனவே நாமும் தூய பவுலோடு சேர்ந்து, ”எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” எனக் கூறலாம் (பிலி 4:13). நம்மை உறுதிப்படுத்துகின்ற கடவுளோடு நாம் எப்போதும் இணைந்திருந்தால் நம் வாழ்விலும் அதிசய செயல்கள் நிகழும்.
மன்றாட்டு
இறைவா, உம் திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்கு அருள்தாரும்.
~அருட்திரு பவுல் லியோன் வறுவேல்