இறைவனுக்கு கீழ்ப்படிவோம்

யாக்கோபு 4: 13 – 17

யாக்கோபு இந்த அறிவுரையை யாருக்குக் கூறுகிறார்? ”இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம். பணம் ஈட்டுவோம்” (4: 13). இந்த இறைவார்த்தை, இந்த அறிவுரை வணிகர்களுக்குச் சொல்லப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இவர்களுக்கு மட்டும் என்று நாம் மற்றவர்களை ஒதுக்கிவிடவும் முடியாது. வணிகர்களை மையமாக வைத்து, எல்லாருக்குமான அறிவுரையாகத்தான் நாம் பார்க்க வேண்டும். முதலில் வியாபாரம் செய்கிறவர், எப்போது போக வேண்டும்? என்பதை தீர்மானிக்கிறார். எங்கு செல்ல வேண்டும்? எத்தனை ஆண்டுகள் தங்க வேண்டும்? என்ன வாணிகம் செய்ய வேண்டும்? அதிலிருந்து எப்படி இலாபம் பெற வேண்டும்? என்று, வாணிகம் செய்வதற்கு அவர் திட்டமிடுகிறார்.

திட்டமிடுவது சரி தானே? ஒரு செயலைச் செய்கிறபோது, சரியான திட்டமிடல் வேண்டும் என்று நாம் தான் சொல்கிறோம். அப்படியென்றால், யாக்கோபு என்ன தான் சொல்ல வருகிறார்? யாக்கோபு திட்டமிடுதலைக் குறை சொல்லவில்லை. நாம் எப்படி வாழ வேண்டும்? என்பதை தீர்மானிப்பது சரிதான். ஆனால், அப்படி தீர்மானிக்கிறபோது, இந்த வாழ்வைக் கொடுத்த கடவுளையும் நினைத்துப்பார்க்க வேண்டும் என்பதுதான், அவர் சொல்ல வருகிற செய்தி. வாழ்க்கை என்பது வியாபாரம் செய்வதற்காக மட்டுமல்ல. நாம் செய்கிற செயலின் நோக்கம், அதில் வாழ்வை வழங்கிய கடவுளின் நோக்கம் என்று ஒட்டுமொத்தமாக நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். வெறுமனே வியாபாரம் செய்வது என்பது, வாழ்வைப் பற்றிய புரிதல் இல்லாத நிலையைக் குறிக்கிறது. அதனைக் கடந்து சிந்திப்பது தான், வாழ்வைப் பற்றிய சரியான புரிதலாக இருக்கும். எனவே, எதைச் செய்தாலும், அதில் வாழ்வை வழங்கிய கடவுளின் நோக்கம் இருக்கிறதா? என்று எண்ணிப்பார்த்து, கடவுளை நம்முடைய வாழ்வின் எல்லாநிலைகளிலும் முதன்மைப்படுத்த வேண்டும் என்பதுதான் அவருடைய அறிவுரையாகும்.

நாம் செய்கிற ஒவ்வொரு செயல்பாடுகளிலும், வாழ்வைப் பற்றி கடவுள் என்னிடம் எதிர்பார்க்கிற நோக்கம் நிறைவேறுகிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம். கடவுளின் பிரசன்னம் எல்லாவற்றிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்வோம். அதுதான் கடவுள் நமக்கு தந்திருக்கிற வாழ்விற்கு நாம் தருகிற பரிசாக இருக்க முடியும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.