ஓசன்னா எனும் புகழ்ப் பாடல்!
இன்று குருத்து ஞாயிறு. ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய வாசகங்கள் குருத்தோலைப் பவனியைப் பற்றி மட்டும் பேசாமல், ஆண்டவர் இயேசுவின் பாடுகள், இறப்பைப் பற்றியும் பேசுகின்றன. எனவேதான், “பாடுகளின் ஞாயிறு” என்னும் பெயரும் உண்டு.
இன்றைய நாளில் இயேசுவின் பாடுகள், துன்பங்களைப் பற்றிச் சிந்திப்போம். ஒரு மாற்றத்துக்காக, அவருடைய உடல் துன்பத்தை அல்லாது, உளவியல் துன்பங்களை, மன உளைச்சலை எண்ணிப் பார்ப்போம். இயேசு மெய்யான மனிதர் என்னும் உண்மையின் அடிப்படையில், இயேசு உண்மையான பாராட்டுதல்களை ஏற்றுக்கொண்டார், மகிழ்ச்சி அடைந்தார் என நாம் நம்பலாம். அதுபோல, அவரைப் பற்றித் தவறான செய்திகள், வதந்திகள் பேசப்பட்டபோது அவர் மனம் புண்பட்டார், தாம் அநியாயமாகக் குற்றம் சாட்டப்படுவதாக எதிர்வாதிட்டார் என்பதையும் நற்செய்தி ஏடுகள் பதிவு செய்திருக்கின்றன.
எனவே, இயேசுவின் பாடுகளின் நாள்களில் அவருக்கு நேரிட்ட உச்ச கட்ட மன அழுத்தங்கள், உளைச்சல், தனிமை உணர்வு, அவமான உணர்வு… இவற்றையும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
“ஓசன்னா” என்று புகழ்ப் பாடல் பாடிய அதே மக்கள் கூட்டம், “சிலுவையில் அறையும்” என்று கூச்சலிட்டபோது, இயேசு மேற்சொன்ன அத்தனை உணர்வுகளையும் நிச்சயம் அனுபவித்திருப்பார். இருப்பினும், உளமுதிர்ச்சி பெற்ற ஒரு மனிதர், அறிவுத் தெளிவு பெற்ற ஒரு தலைவர், யதார்த்த நிலை உணர்ந்த ஒரு போராளி என்ற வகையில் இந்த மன உளைச்சலையும், அவமான உணர்வுகளையும் அவர் நேர்மனதோடு ஏற்றுக்கொண்டிப்பார் என்றும் நாம் நிச்சயம் நம்பலாம். அந்த வகையில், உணர்வுரீதியில் துன்பம் அடைந்தாலும், அறிவின் பார்வையில் அவற்றையெல்லாம் இயேசு தெளிவோடு ஏற்றுக்கொண்டார். அவற்றையும் உலக மீட்பின் விலை என்று ஒப்புக்கொடுத்தார்.
இயேசுவைப் பின்பற்றி, நாமும் நமது வாழ்வில் வரும் உணர்வியல் சிலுவைகளையும், துன்பங்களையும் தெளிந்த மனதுடன் ஏற்கவும், அவற்றையும் மீட்பின் பணியாக அர்ப்பணிக்கவும் அருள்வேண்டுவோம்.
மன்றாடுவோம்: பாடுகளையும், உளவியல் துன்பங்களையும் ஏற்றுக்கொண்ட இயேசுவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் எதிர் உணர்வுகளையும் நேர்மனதோடும், விவிலிய மனநிலையிலும் ஏற்றுக்கொள்ளும் வலிமையைப் பெற்றுக்கொள்வோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
– பணி குமார்ராஜா