ஒரே நாளில் நிம்மதி.. நிறைவு…
மத்தேயு 19:16-22
இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
இந்த உலகில் பிறந்த பெரும்பாலான மக்களுக்கு ஒரு ஆசை கண்டிப்பாக இருக்கிறது. அதுதான் அவர்களின் பிரதான இலட்சியமாக இருக்கிறது. அது என்னவெனில் நிம்மதியை பெற வேண்டும், நிறைவோடு வாழ வேண்டும் என்பது. நிறைவோடும் நிம்மதியோடும் வாழ வேண்டும் என்ற ஆசை உடையவரா நீங்கள். வாசிங்க வாசிங்க இன்றைய நற்செய்தி வாசகத்தை வாசிச்சிக்கிட்டே இருங்க. இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் நிம்மதியோடும், நிறைவோடும் வாழ இரண்டு வழிமுறைகள் சொல்லித் தரப்படுகின்றன.
1. கண்டிப்பாக கடைப்பிடி…
எதைக் கடைப்பிடிக்க வேண்டும்? இறைவன் நமக்கு அருளிச் செய்த பத்துக்கட்டளைகள் பத்து. இந்த பத்தையும் பசுமரத்தாணிபோல நெஞ்சில் பதித்து கடைப்பிடிக்க வேண்டும்.
2. கண்டிப்பாக பகிர்ந்தி…
எதை பகிர வேண்டும்? இருப்பதை பகிர வேண்டும். பகிர்ந்து என் பக்கத்தில் இருப்பவருடைய இல்லாமையை இல்லாமல் ஆக்க வேண்டும். எடுத்துக்காட்டாக கல்வி கற்க முடியாமல் இருக்கும் மாணவச்செல்வங்களுக்கு நம்மாலான உதவிகள் செய்து கல்லாமையை இல்லாமை ஆக்க வேண்டும். அதற்காக பகிர்ந்திட வேண்டும்.
இந்த இரண்டுமே நம்மை நிம்மதி உள்ள மனிதர்களாக மாற்றும். இந்த இரண்டுமே நம்மை நிறைவு காணும் மனிதர்களாக அடையாளப்படுத்தும். இன்றே செய்யலாமே?
மனதில் கேட்க…
1. பத்துக்கட்டளைகள் மனப்பாடமாக தெரியுமா? அல்லது மறந்துப்போயிட்டா? கடைப்பிடிக்கிறேனா?
2. ஒரே நாளில் நான் நிம்மதி, நிறைவு பெறலாமா? முழுமுயற்சி எடுக்கலாமா?
மனதில் பதிக்க…
நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்(மத் 19:21)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா