எவரது மனதில் வஞ்சம் இல்லையோ அவர் பேறுபெற்றவர்
திருப்பாடல் 32: 1 – 2, 5, 11, (7)
குற்றங்கள் மன்னிக்கப்படுவதற்கு எதை கடவுள் அளவுகோலாக வைத்திருக்கிறார்? ஒருவன் வாழ்நாள் முழுவதும் தவறு செய்திருக்கிறான். தன்னுடைய கடைசி தருணத்தில் அவன் தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கிறான். அப்படியென்றால், இவ்வளவு நாட்கள் அவன் செய்த பாவத்திற்கு என்ன தண்டனை? அவற்றையெல்லாம் கடவுள் பொருட்படுத்த மாட்டாரா? என்கிற எண்ணங்கள் நமக்குள்ளாக எழலாம். இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட கள்வன் வாழ்நாள் முழுவதும் திருடுவதிலும், கொலைக் குற்றத்திலும் ஈடுபட்டவன். அவன் செய்த பாவங்களை ஒரு நொடியில் இயேசு மன்னித்தார் என்றால், அவன் செய்த தவறுக்கான தண்டனை தான் என்ன?
இன்றைய திருப்பாடல் அதற்கான பதிலைத் தருகிறது. குற்றமுள்ள நெஞ்சத்தோடு ஒருவனால் கடவுளிடத்தில் மன்னிப்பு கேட்க முடியாது. ஒருவேளை அவன் மனிதர்களிடத்தில் நடித்துவிடலாம். ஆனால், கடவுளிடத்தில் ஒரேநாளில் ஒருவனால் நிச்சயம் திருந்திவிட முடியாது. திருப்பாடல் சொல்கிறது: எவரது மனத்தில் வஞ்சம் இல்லையே அவன் பேறுபெற்றவன். வஞ்சத்தோடு கடவுளிடத்தில் எவரும் மன்னிப்பு கேட்க முடியாது. மனமாற்றமும் ஒரேநேரத்தில் நிகழ்ந்து விடாது. சவுல் பவுலாக மாறிய நிகழ்ச்சி ஒரேநாளில் நடைபெற்றதாக இருக்கலாம். ஆனால், நிச்சயம் சவுலாக இருந்தபோதே, பலவிதமான கேள்விகள் அவரை ஆட்கொண்டிருக்கும். தான் செய்வது சரியா? தான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறேனா? என்கிற கேள்விகள் வஞ்சம் இல்லாத உள்ளத்தில் எழுந்து கொண்டே இருக்கும். குற்ற உணர்ச்சி அவரைத் தூங்கவிடாது துரத்திக்கொண்டேயிருக்கும். அதுதான் ஒருநாளில் இறையனுபவமாக வெடிக்கிறது.
மனிதர்களாகிய நாம் ஒரு மனிதனின் மேலோட்டமான செயல்பாடுகளை வைத்து தீர்ப்பிடுகிறோம். கடவுள் உள்ளத்தையும் ஊடுருவிப்பார்க்கிற வல்லமை படைத்தவர். அவரை யாராலும் ஏமாற்ற முடியாது. மன்னிப்பிற்கு தகுதியானவன் மட்டும் தான், மன்னிப்பு பெற முடியுமே தவிர, வேறு எவராலும் கடவுளின் மன்னிப்பைப் பெற முடியாது.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்