என் நெஞ்சே! ஆண்டவரைப் போற்றிடு
திருப்பாடல் 146: 5 – 6b, 6c – 7, 8 – 9a, 9b – 10
”என் நெஞ்சே! ஆண்டவரைப் போற்றிடு!
“நெஞ்சம் நிறைந்த நன்றி“ என்று பொதுவாகச் சொல்வார்கள். இதனுடைய பொருள் என்ன? வழக்கமாக நன்றி சொல்கிறபோது, வார்த்தைகளால் அலங்கரித்து நன்றி சொல்வார்கள். மிகப்பெரிய மேடையில், ஒருவர் நன்றி சொல்கிறபோது, அதனை ஒரு கடமையாகத்தான் சொல்வார். அதே நேரத்தில், ஒரு விழாவினை ஏற்பாடு செய்ய எல்லாமுமாக இருந்து, அந்த விழாவினைச் சிறப்பாக நடத்தி முடித்த மனிதரே, நன்றி சொல்ல வருகிறபோது, அது வெறும் வார்த்தைகளாக இருக்காது. நன்றிப்பெருக்கினால், தன்னுடைய ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லக்கூடிய நன்றியாக இருக்கும். அதுதான் உண்மையான நன்றி, ஆழமான நன்றி.
இன்றைய திருப்பாடலில் ஆசிரியர் தன்னுடைய நெஞ்சத்தை “இறைவனைப் போற்றிடு“ என்று சொல்வது இதனைக் குறிக்கக்கூடிய வார்த்தையாகத்தான் இருக்கிறது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து இறைவனுக்கு எழுப்பக்கூடிய நன்றியாக இருக்கிறது. ஏனென்றால், அவருடைய புகழ்ச்சி வெறும் வார்த்தையல்ல, மாறாக, அனுபவத்தின் ஆழம். அனுபவித்ததின் வெளிப்பாடு. ஆண்டவர் எப்படியெல்லாம் நீதியுள்ளவராக இருந்தார், நீதியை ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் நிலைநாட்டினார் என்பதனை, இது வெளிப்படுத்துவதாக இருக்கிறது. உண்மையை உரக்கச் சொல்வதாக அமைந்திருக்கிறது.
நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் நாம் இறைவனைப் போற்ற வேண்டும். அது வெறும் உதட்டளவு புகழ்ச்சியாக இருக்கக்கூடாது. மாறாக, அதனையும் கடந்து, உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும் புகழ்ச்சியாக இருக்க வேண்டும். அதனை நம்முடைய வாழ்க்கையில் நாம் உணர்ந்து, இறைவனைத் தொடர்ந்து போற்றுவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்