”என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்” (லூக்கா 15:6)
இயேசு யாரைத் தேடி வந்தார்? கடவுளிடமிருந்து அகன்றுசெல்வோர் யாராயிருந்தாலும் அவர்களுக்கு வாழ்வளிக்கவே இயேசு வந்தார். ஆனால் சில வேளைகளில் சில மனிதர்கள் தங்களுடைய உண்மையான நிலையை மறந்துபோகிறார்கள். கடவுளின் முன்னிலையில் தாங்கள் நல்லவர்கள் என இவர்கள் இறுமாப்புக் கொள்வதோடு, பிறரைக் குறைகூறுவதிலும் பிறர் பாவிகள் எனக் குற்றம் சாட்டுவதிலும் இவர்கள் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இயேசுவின் போதனைப்படி, நாம் எல்லோருமே கடவுளின் இரக்கத்தை நம்பி வாழ வேண்டியவர்களே. நமக்குக் கடவுளின் உதவி தேவை இல்லை என நாம் கூற இயலாது. ஏனெனில் நாம் எல்லாருமே மந்தையைவிட்டு அகன்று போகின்ற ஆட்டிற்கு ஒப்பானவர்களே. நம்மைத் தேடி வருகின்ற அன்புமிக்க கடவுள் நம்மைக் கண்டுபிடித்து நம்மேல் தம் அன்பைப் பொழிகிறார் என்னும் உண்மையை நாம் ஏற்றாக வேண்டும்.
காணாமற்போன ஆட்டைத் தேடிச் செல்கின்ற ஆயரைப் போல நம்மைத் தேடி வருகின்ற கடவுளை நாம் எவ்வாறு புரிகின்றோம்? எல்லையற்ற அன்பு அவருடைய உள்ளத்தில் இருக்கிறது என்பதில் ஐயமில்லை; தவறிப்போகின்ற நம்மைத் தேடிக் கண்டுபிடிக்கின்ற கு கடவுள் உண்மையிலேயே மட்டற்ற ”மகிழ்ச்சியடைகின்றார்” (லூக்கா 15:8). அந்த மகிழ்ச்சி நல்லவர்கள் குறித்து அவர் அடைகின்ற மகிழ்ச்சியைவிடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்பதுதான் நமக்கு வியப்பைத் தருகிறது. தொண்ணுற்றொன்பது ஆடுகள் தம்மோடு இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் காணாமற்போன நூறாவது ஆட்டினைத் தேடிச் செல்கின்ற ஆயர் உண்மையிலேயே அந்த ஆட்டின்மீது அளவுகடந்த அன்புகொண்டிருக்க வேண்டும். இதுவே கடவுள் பாவிகள் மீது காட்டுகின்ற அன்பு. அதாவது, பாவிகளாகிய நம்மீது அவர் காட்டுகின்ற அன்புக்கு அளவு கிடையாது; எல்லை கிடையாது. கடவுளின் அன்பு கடலின் விரிவைவிட மிகப் பரந்தது. அந்த அன்பின் ஆழத்தை அளந்திட மனித அறிவால் இயலாது. எனவே, அளவுகடந்த விதத்தில் நம்மை அன்புசெய்யும் கடவுளை விட்டுப் பிரியாமல் அவருடைய அன்பில் நாம் என்றும் நிலைத்திருக்கவேண்டும் என்பதே கடவுள் நமக்க விடுக்கின்ற அழைப்பு.
மன்றாட்டு
இறைவா, உம்மைவிட்டுப் பிரியா வரம் எங்களுக்குத் தந்தருளும்.
~அருட்திரு பவுல் லியோன் வறுவேல்