என்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும்
“பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும், என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்” என்னும் இயேசுவின் சொற்களை இன்று தியானிப்போம்.
கொஞ்சம் கடினமான சொற்கள், கடினமான தொனியும்கூட. ஏன் இந்தக் கடுமை? தன்னைக் குறித்தும், தமது வார்த்தைகளைக் குறித்தும் பலர் வெட்கப்படுவர் என்று இயேசு அறிந்திருந்தார். எனவே, அவர்களைப் பாவத்தில் உழலும் விபசாரத் தலைமுறை என அழைக்கிறார். பாவத்தில் வாழ்பவர்கள் இயேசுவை விட்டுப் பிரிந்து நிற்கிறார்கள் என்பதே வேதனை. ஆனால், இயேசுவைக் குறித்தும், அவரது வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படுவார்கள் என்றும் இயேசு கூறுகிறார்.
பாவத்தைப் பற்றிய வெட்க உணர்வு குறைவது ஒரு தவறான அடையாளம். இயேசுவின் காலத்தைப் போலவே, நாம் வாழும் இந்நாள்களிலும் பாவத்தைப் பற்றிய வெட்க உணர்வு குறைந்து வருகிறது. லஞ்சம், ஊழல், ஒழுக்கவியல் தவறுகள்… இவற்றைச் செய்வோர் அதைப் பற்றிய எந்த வெட்க உணர்வும் இல்லாது வாழ்கிறார்கள்.
ஆனால், ஆலயம் வருவதற்கும், இறை வார்த்தையைக் கேட்பதற்கும், வார்த்தையின்படி வாழ்வதற்கும் இவர்கள் வெட்கப்படுகின்றனர். “இப்படி எல்லாம் வாழமுடியுமா?” என்று கேட்கின்றனர் இவர்கள். ஆனால், இயேசு இவர்களைப் பற்றி இறுதி நாளில் வெட்கப்படுவார்.
நமது கவலையெல்லாம் இயேசு நம்மைப் பற்றி வெட்கப்படாதவாறு நமது சொற்களையும், செயலையும், வாழ்வையும் அமைத்துக்கொள்வதுதான்.
மன்றாடுவோம்: இறைவனின் அன்பின் அடையாளமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் உம்மைக் குறித்தும், உமது வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படாமல் பெருமிதம் கொள்ளும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
– பணி குமார்ராஜா