எச்சரிக்கை உணர்வு
இந்த உலகம் என்பது ஒரு சத்திரம் போன்றது. ஒரு சத்திரத்தில் யார் வேண்டுமானாலும் தங்கலாம். அவர்களுக்கான உணவையும் அங்கே பெற்றுக்கொள்ளலாம். அங்கே தங்கி இளைப்பாறவும் செய்யலாம். ஆனால், யாரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது. நமது தேவை முடிந்தவுடன், நமது பயணத்தைத் தொடர வேண்டும். ஏனென்றால், சத்திரம் நமக்கான நிலையான இடம் கிடையாது. நமக்கென்று, நாம் வாழ்வதற்கென்று அருமையான இல்லம் இருக்கிறது. அது போல, இந்த பூமியில் நமது வாழ்வு நிலையான வாழ்வல்ல. இது ஒரு பயணத்தில் நாம் சந்திக்கின்ற சத்திரம் போன்றது. இதற்கு நாம், நிலையாக இருப்பது போல, உரிமை கொண்டாட முடியாது. இந்த மனநிலையை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இயேசு நமக்குத்தரும் அழைப்பு.
இயேசுவின் வார்த்தைகள், செல்வந்தர்களைப்பற்றி கடினமானது என்றாலும், அது அவர்களைத் தீர்ப்பிடுவது அல்ல. ஏனென்றால், செல்வந்தர்களாக இருந்து, இயேசுவின் நன்மதிப்பைப்பெற்றவர்களும் இருக்கிறார்கள். சக்கேயு மிகப்பெரிய செல்வந்தர். ஆனால், இயேசு கொடுக்கும் மீட்பைப்பெற்றுக் கொண்டார். அரிமத்தியா ஊரைச்சேர்ந்த யோசுப்பும் செல்வந்தர். அவரும் இயேசு அன்பு செய்த முக்கியமான மனிதர். நிக்கதேம் இயேசுவின் அடக்கச்சடங்குக்குத் தேவையான விலை உயர்ந்த நறுமணப்பொருட்களைக் கொண்டு வந்தார். அவரும் நிச்சயம் பணக்காரராக இருந்திருக்க வேண்டும். அவர்கள் அனைவருமே இயேசுவின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக வாழ்ந்தனர். இயேசுவின் நோக்கம் செல்வந்தர்களைத் தீர்ப்பிடுவது அல்ல. மாறாக, செல்வத்தினால் வரும் இடர்களை, எச்சரிக்கையாக தருகிறார்.
செல்வத்தைப் பற்றிய இயேசுவின் வார்த்தைகள் நிச்சயம் உண்மை என்பதை அனைவருமே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால், இந்த உலகத்திலே இருக்கிற பல மனிதர்கள், செல்வந்தர்களாக மாறியவுடன், கடவுளை மறந்துவிடுகிறார்கள். கடவுள் இருக்க வேண்டிய இடத்தில், செல்வத்தை வைத்துவிடுகிறார்கள். செல்வத்தின்மட்டில் நாம் எச்சரிக்கை உணர்வோடு வாழ்வோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்