உங்கள் கட்டிடத்தை கட்டியது கடவுளா?
கார்மல் அன்னை திருவிழா
அனைவருக்கும் கார்மல் அன்னை திருவிழா நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கார்மல் அன்னையின் பாதுகாப்பும் பரிந்துரையும் உங்களுக்கு என்றென்றும் கிடைப்பதாக!
அன்னை மரியாள் என்ற கட்டிடத்தை கட்டியது கடவுள். அவர் ஒரு கட்டிடக் கலைஞர். அன்னை மரியாளின் கனவுகள், எதிர்காலம், தேவைகள், சாதனைகள் என அனைத்தையும் கட்டியது கடவுளே. அதற்கான முழு பொறுப்பையும் அன்னை மரியாள் கடவுளிடத்தில் கொடுத்துவிட்டார்கள். அதைத்தான் லூக் 1:38 ல் “நான் ஆண்டவரின் அடிமை உமது விருப்பப்படி எனக்கு நிகழட்டும்” என்கிறார் அன்னை மரியாள். ஆண்டவரே நான் உம்மிடம் என்னை தந்துவிட்டேன் நீர் என் உடலாகிய கட்டிடத்தை கட்டும் என்கிறார். அவர் கொடுத்ததால் கடவுள் மிகவும் எழில்மிக்கதாய் கட்டினார். எல்லோரும் போற்றும் வண்ணம் கட்டினார்.
நம்முடைய வாழ்வில் ஏன் முன்னேற்றம் இல்லை? காரணம் நாம் நம் உடலாகிய கட்டிடத்தை, கடவுளின் பொறுப்பில் ஒப்படைக்கவில்லை. நம் வாழ்க்கையின் பொறுப்பை கடவுளிடத்தில் கொடுக்கவில்லை. மாறாக நாமே எடுக்கிறோம். முடிவில் முட்டி மோதி கீழே விழுகிறோம். நாம் நம் வாழ்க்கையின் பொறுப்பை எடுத்ததால் சம்பாதித்தது என்ன? மனஅழுத்தம், அமைதியின்மை, நிம்மதியின்மை, தனிமை, வெறுமை, பகைகை இவைகளே.
உங்கள் கட்டிடத்தை கட்டி முடிக்க கடவுளுக்கு அனுமதி கொடுத்து பாருங்களேன். பின் என்ன நடக்கிறது என்பதை எண்ணிக் கொண்டே இருங்கள். கார்மல் அன்னை அனைத்தையும் ஆண்டவரிடமிருந்து அனுபவித்தார்கள். நம்மை அன்போடு அழைக்கிறார்கள். வாருங்கள் வாழ்வோம் வளமாக.
மனதில் கேட்க:
• கார்மல் அன்னையிடமிருந்து நான் பெறுவது என்ன?
• கடவுள் என்னை கட்ட நான் அனுமதி கொடுப்பேனா?
மனதில் பதிக்க:
ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில் அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்(திபா 127:1)
– அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா