உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்
லூக்கா 17:26-37
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
நாம் வாழும் நாட்களில் நம்முடைய தண்டனைத்தீர்ப்பை பெரும்பாலும் மனதில் கொள்வதில்லை. கடைசியில் என்ன நிகழும் என்பதை தெளிவாக தெரிந்தவர்கள் வாழ்க்கையை விழிப்பாக நகர்த்திச் செல்வார்கள். இன்றைய நற்செய்தி வாசகம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள அழைப்புக் கொடுக்கிறது. எதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தண்டனைத் தீர்ப்பிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கான இரண்டு முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
1. நம்பிக்கை
காலம் செல்ல செல்ல கடவுள் மீது நம்பிக்கை வைப்பவர்கள் எண்ணிக்கை குறைகிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எந்த செயலையும் திருப்தியாக செய்வதில்லை. வாழ்க்கையில் ஒரு பிடிப்பு, உற்சாகம் இல்லாமல் அவர்கள் அலைவது உண்டு. நம்பிக்கை இருப்பவர்கள் இறைவனை இறுக்கமாக பற்றிக்கொண்டு அவருக்கு பிடித்தமானவற்றை நாடி தண்டனைத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர்.
2. நன்மை
எங்கிருந்தாலும் நன்மை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் நம்மை பல தீங்குகளிலிந்து காக்கின்றது. நன்மை வாங்கிய நாம் நன்மை செய்ய வேண்டும். நன்மை செய்யும் நாம் பல உள்ளங்களிலே உற்சாகத்தையும், தாக்கத்தையும் உருவாக்க வேண்டும். நன்மை தண்டனைத் தீர்ப்பிலிருந்து நம்மை காக்கும் கேடயமாகும்.
மனதில் கேட்க…
1. என்னை காப்பாற்றிக்கொள்ள நான் செய்து வருகின்ற செயல்கள் என்னென்ன?
2. நம்பிக்கை, நன்மை இரண்டும் என்னுடைய வாழ்க்கையில் உள்ளதா?
மனதில் பதிக்க…
மாசற்றவராய் நடப்போரே! – இன்னோர் நேரியவற்றைச் செய்வர். உளமார உண்மை பேசுபவர் (திபா 15:2)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா