இறைவன் அருளும் வாக்குறுதி
எரேமியா 33: 14 – 16
எதிர்காலத்தில் நிகழவிருக்கிற சிறப்பான வாழ்வை, இன்றைய வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா முன்னறிவிக்கின்றார். கடவுள், இஸ்ரயேல் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கின்றார். அவர்களை சிறப்பான விதத்தில் வழிநடத்துவதாகவும், அவர்கள் விடுதலையின் காற்றைச் சுவாசிப்பார்கள் என்றும் அந்த வாக்குறுதி சொல்கிறது. அந்த வாக்குறுதி நிறைவேறுமா? எவ்வளவு காலத்திற்கு மக்கள் காத்திருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட தருணத்தில் இறைவாக்கினரின் வாக்கு அவர்களுக்கு அருளப்படுகிறது.
இந்த இறைவார்த்தையின் மையப்பகுதியாக விளங்குவது, இஸ்ரயேலின் கடவுள் வாக்குறுதி மாறாதவர், சொன்னதைச் செய்து முடிப்பவர் என்பதேயாகும். கடவுள் வாக்குறுதி கொடுத்தால், அது காலம் கனிகிறபோது, அல்லது தகுதியான காலத்தில், அவரே சூழ்நிலைகளை உருவாக்கி சிறப்பான விதத்தில், அவர் நிறைவேற்றுகிறார். இஸ்ரயேல் மக்கள் எந்த தருணத்திலும் மன உறுதி இழந்து விடாமல், விசுவாசத்தோடு இருக்க வேண்டும். கடவுள் நிச்சயம் அவர்களுக்கு உதவி செய்வார். அந்த காலம் கனிவதற்கு, அவர்கள் இறைவனிடம் நம்பிக்கை உணர்வோடு மன்றாட வேண்டும் என்பது தான், இங்கு வழங்கப்படுகிற செய்தியாகும்.
நம்முடைய அன்றாட வாழ்வில், நாமும் பல்வேறு விதமான சோதனைகளைச் சந்திப்போம். அந்த தருணங்களில், நாம் நம்பிக்கை இழந்து விடாமல், இறைவன் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு, இறைப்பற்றோடு வாழ வேண்டுவோம். இறைவனின் அருளும், ஆசீரும் நமக்கு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று, தொடர்ந்து செபிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்