இறைவனை நம்புவோம், இறையருள் பெறுவோம்
இயேசுகிறிஸ்துவின் போதனைகள் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுவதற்கு முக்கிய காரணம், அவரது எளிமையான கருத்துக்கள். மிகப்பெரிய தத்துவத்தையும் எளிய நடையில் பாமர மக்களையும் புரிந்துகொள்ள வைக்கக்கூடிய ஞானம் தான் மற்றவர்களை அவரை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்தது. ஒரு குழந்தையை வைத்து மிகப்பெரிய வாழ்வியல் தத்துவத்தை தன் சீடர்களுக்கு அவர் தருகிறார்.
இறையரசுக்கு தகுதி பெறுவதற்கு குழந்தையைப் போல் மாற வேண்டும். அதாவது குழந்தைகளுக்குரிய குணநலன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான். குழந்தைகளிடத்திலே நாம் பார்க்கும் முக்கிய பண்பு மறத்தலும், மன்னித்தலும். மனதிலே வைராக்கியத்தோடு வைத்திராமல் மற்றவர் செய்த தவறை சிறிதுநேரத்தில் மறந்து மீண்டும் அன்போடும், பாசத்;தோடும் பழகுவது. மற்றொரு பண்பு: தன்னை கர்வம் கொள்ளாமல், மற்றவர்கள் மீது குறிப்பாக தன்னுடைய பெற்றோரைச்சார்ந்து வாழ்வது. இறைவனுடைய அரசிற்கு தகுதி பெற வேண்டுமென்றால், நமது வைராக்கியத்தை, கர்வத்தை தூக்கி எறிந்துவிட்டு, தாழ்ச்சியுள்ளவர்களாக கடவுளைச் சார்ந்து இருக்கக்கூடியவர்களாக வாழ வேண்டும்.
இறைவன் முன்னிலையில் பால்மணம் மாறாத பச்சிளங்குழந்தைகளாக நம்மை கருதுவோம். தாய்க்குரிய பாசத்தோடு, அன்போடு நம்மை வழிநடத்த அவர் காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய பராமரிப்பில் நம்மையே கையளிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்