இறையாட்சியின் சவால்கள்
”திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள் வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்” என்று, 12 வது இறைவார்த்தைச் சொல்கிறது. இதே வார்த்தையின் பொருள் லூக்கா 16: 16 ல், வெளிப்படுகிறது. ”திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும்தான். அதுமுதல் இறையாட்சி பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. யாவரும் இறையாட்சிக்குட்பட நெருக்கியடித்துக்கொண்டு வருகிறார்கள்”. இதனுடைய பொருள் என்ன? இயேசு இதன் வழியாக சொல்லவிரும்புகிற கருத்து என்ன?
விண்ணரசு எப்போதுமே வன்முறையைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது. இங்கே விண்ணரசு என்று சொல்லப்படுவது, அதை அறிவிக்கிறவர்கள். திருமுழுக்கு யோவான் வந்தார். ஆண்டவருடைய அரசை அறிவித்தார். அவர் கொல்லப்பட்டார். யாரெல்லாம் ஆண்டவருடைய அரசை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவா்கள் அனைவருக்கும், இதுதான் கதியாகும். விண்ணரசை எதிர்க்கிறவர்கள் எப்போதுமே மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கிறார்கள். ஆனால், அதையும் துணிவோடு சந்திக்கிறவர்களால் தான், இன்றைக்கும் விண்ணரசு அழியாமல் உறுதியாக நிற்கிறது.
நாம் அனைவருமே இறையாட்சியின் தூண்கள். நாம் ஒவ்வொருவரும் இறையாட்சி என்னும் மாளிகையை கட்டுவதற்கு, ஒரு தூணாக அமைய வேண்டும். மாளிகையை ஆபத்திலிருந்து காப்பாற்றும் தூண்களாகத்தான் இறைவாக்கினர்களும், திருத்தூதர்களும், அவர்கள் வழிவந்தவர்களும் மாறியிருக்கின்றனர். இந்த சவால் நமக்கும் தரப்படுகிறது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்