இயேசுவின் வல்லமை
மருத்துவம் அவ்வளவாக வளர்ச்சியடையாத காலக்கட்டம். பார்வையின் மகத்துவம் தெரியாத மனித சமூகம். இவற்றிற்கு மத்தியில் அறியாமை. இதனால், இயேசு வாழ்ந்த காலத்தில் ஏராளமான போ் தங்களது கண்பார்வையை இழந்திருந்தனர். கண் பார்வை இழப்பிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவையனைத்துமே சாதாரண காரணங்கள் தான். சூரிய ஒளியிலிருந்து சில சமயங்களில் வரக்கூடிய கடுமையான ஒளி, சரியாக கண்களைப் பராமரிக்காமை, தொற்று போன்றவை, பார்வை இழப்பிற்கு காரணங்களாக இருந்தன. அப்படிப்பட்ட சூழ்நிலை நிலவிய காலக்கட்டத்தில், இரண்டு பார்வையற்ற மனிதர்கள் இயேசுவிடத்தில் பார்வை பெற வருகிறார்கள்.
இயேசு அவர்கள் கூப்பிட்டவுடன் பதில் சொல்லிவிடவில்லை. அவர்களின் தேடல் உண்மையானதா? உறுதியானதா? என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார். அது உண்மையானதும், உறுதியானதும் என்பதை உணர்ந்தவுடன் அவர், அவர்களுக்கு உதவி செய்கிறார். கடவுளிடத்தில் நாம் செபிக்கிறபோது, அது உண்மையானதாக, உறுதியானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கடவுளிடத்தில் நாம் தொடர்ந்து சென்று கொண்டேயிருப்போம். எப்போது நாம் வெறும் தேவைக்காகச் செல்கிறோமோ, அப்போது நம்மிடத்தில் உண்மையிருக்காது. உறுதியிருக்காது. அந்த இரண்டு பார்வையற்றவர்களும் இயேசுவை, கடவுளை நம்பினர். கடவுள் அவர்களுக்கு பார்வை தர முடியும், என்று நம்பினர். எனவே, அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
நமது விசுவாச வாழ்வு வெறும் தேவையை நிறைவேற்றுவதாக இருக்கிறதா? அல்லது அந்த தேவைகளையும் தாண்டி, கடவுளின் அன்பில், உண்மையாக, உறுதியாக இருக்கிறோமா? எனச்சிந்திப்போம். கடவுளைப்பற்றிய நமது தேடல், நற்செய்தியில் வருகிற பார்வையற்றவர்களைப் போல இருக்க வேண்டுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்