இயேசுவின் திருவுடல், திரு இரத்தப் பெருவிழா
உடலும், இரத்தமும்…
இன்று ஆண்டவர் இயேசு தம் திருவுடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தரும் அவரது பேரன்பைப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
உடல் என்பது ஒருவரது ஆளுமையின் மிக வெளிப்படையான கூறு. மனம், ஆன்மா, உணர்வுகள் என்பவை வெளியில் தெளிவாகக் காணக்கிடைக்காத ஆளுமையின் தளங்கள். ஆனால், உடல் மட்டுமே அனைவருக்கும் அறிமுகமான, வெளிப்படையான தளம்.
அது மட்டுமல்ல, உடல்தான் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யத் தகுந்த மிகச் சிறந்த தளமும்கூட. அதனால்தான், ஆண்டவர் இயேசு தம் உடலை இறைவனுக்காகவும், நமக்காகவும் கையளித்தார். “கிறிஸ்’து உலகிற்கு வந்தபோது, ‘பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால், ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எனவே, நான் கூறியது: உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ நான் வருகின்றேன்””“ (எபி 10: 5-7) என எபிரேயர் திருமடலில் வாசிக்கிறோம். “இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறி’ஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்”“ (எபி 10: 10).
இரத்தம் உயிரின் ஆதாரம். இரத்தம் சிந்துதால் தியாகத்தின் அடையாளம். “இரத்தம் சிந்துதல் இன்றி பாவ மன்னிப்பு இல்லை”“ (எபி 9:22). நமது பாவமன்னிப்புக்காக இயேசு தம் இரத்தத்தைச் சிந்தினார். “உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல: மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தாமாகும்“ (1 பேது 1: 18-19) என்கிறார் பேதுரு.
எனவே, இயேசுவின் உடலுக்காக, இரத்தத்துக்காக இன்று நன்றி செலுத்துவோம். நமத உடலையும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றக் கையளிப்போம். நமது இரத்தத்தைச் சிந்தாவிட்டாலும், பிறர் வாழ தியாகங்கள் செய்ய முன்வருவோம்.
மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது திருவுடல், திருஇரத்தம் என்னும் கொடைகளுக்காக நன்றி கூறுகிறோம். எங்களை ஆசிர்வதித்தருளும், ஆமென்.
~அருட்தந்தை குமார்ராஜா