இன்று புதுமையானவற்றைக் காண்பாய்!
லூக்கா 5:17-26
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
கடவுளிடமிருந்து ஆசீர் வேண்டும் என நாம் ஏங்குவது உண்டு. அதற்காக தான் நாம் தினமும் ஆசைப்படுகிறோம். நாம் ஆசைப்படும் அந்த ஆசீரை இன்றைய நற்செயதி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. முடக்குவாதமுற்றவர் அந்த ஆசீரைப் பெற்றுக்கொண்டார். நாமும் பெற வேண்டுமெனில் இரண்டு வழிகள் அதற்கு உண்டு.
1. பாவமன்னிப்பு
நாம் ஒவ்வொரு நாளும் கடவுளிமிருந்து ஆசீரை பெற வேண்டுமெனில் பாவமன்னிப்பு என்பது அவசியமானது. இந்த பாவமன்னிப்பை நாம் அனுதினமும் திருப்பலியல் கலந்துக்கொண்டு பெற்றுக்கொள்ளலாம். நம் பாவத்தை மனதுருகி அறிக்கையிடலாம். பாவத்திலிருந்து மன்னிப்பு பெற்றோமெனில் கடவுளின் ஆசீர் மிக எளிதாக நமக்குள் பாய்ந்து வர முடியும். பாவத்திலிருந்து வெளியே வந்த நாம் புதுமையான, வித்தியாசமான காரியங்களை நம் வாழ்வில் மிக எளிதாக செய்ய முடிகிறது. புதுமையானவற்றைக் காண முடிகிறது.
2. உறுதியான பிடிப்பு
இனி பாவம் செய்ய மாட்டேன் என்ற உறுதியான பிடிப்பு என்பது வேண்டும். விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இனி பாவம் செய்யாதே என்றார். அன்றிலிருந்து அவர் புதுமையான மனுசியாக மாறினார். நாமும் பாவஅறிக்கை செய்த பிறகு உறுதியான பிடிப்புடன் அனைத்தையும் உதறி தள்ள வேண்டும். இனி பாவம் செய்யமாட்டேன் என்ற உறுதியான பிடிப்பு நமது இலக்காக மாற வேண்டும். இதன் வழியாக நாம் புதுமையான, வித்தியாசமான காரியங்களை நம் வாழ்வில் மிக எளிதாக செய்ய முடிகிறது. புதுமையானவற்றைக் காண முடிகிறது.
மனதில் கேட்க…
1. இன்று நான் செய்யப்போகும் புதுமையானது என்ன?
2. பாவத்தை விட வேண்டும் என்ற உறுதியான பிடிப்பு என்னிடம் உள்ளதா?
மனதில் பதிக்க…
இன்று புதுமையானவற்றைக் கண்டோம் (லூக் 5:26)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா