ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை கடவுள் நினைவுகூர்ந்தார்
திருப்பாடல் 105: 6, 7, 8, 9, 42 – 43
கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு உண்மையாக இருக்கிறவர். அவர்களோடு உடன் பயணிக்கிறவர். அதற்கு அடித்தளமாக இருப்பது கடவுள் கொடுத்திருக்கிற வாக்குறுதி. கடவுள் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறார்? யாரோடு வாக்குறுதி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்? தொடக்கநூல் 12 வது அதிகாரத்தில் கடவுள் ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கையை வாசிக்கிறோம்: ”உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன். நீயே ஆசியா விளங்குவாய்”. ஆக, கடவுள் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்து கொண்டு, இந்த உலகத்திற்கு அவரிலிருந்து தோன்றுகிற இனம் ஆசீர்வாதமாக இருக்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறார்.
கடவுள் கொடுத்த வாக்குறுதிக்கு பிரமாணிக்கமாய் இருக்கிறார். அவரது வாக்குறுதியின்படியே அவர் இஸ்ரயேல் மக்களை வழிநடத்துகிறார். அவர்களுக்குத் தேவையான காரியங்களைச் செய்கிறார். அவர்களுக்கு நாட்டை வழங்குகிறார். எதிரிகளை அடிபணியச் செய்கிறார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் அவரை புறக்கணிக்கிறார்கள். அவரை உதாசீனப்படுத்துகிறார்கள். அவர்கள் தவறை உணர்கிறபோது, கடவுளை நெருங்கமுடியாதபடிக்கு பாவங்களால் நிறைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நெருக்கடியாக நேரத்தில், தாவீது இஸ்ரயேல் மக்களுக்கு நம்பிக்கை நிறைந்த சொற்களைச் சொல்கிறார். கடவுள் வாக்குறுதி மாறாமல் இருக்கிறதனால், நிச்சயம் பாவத்திற்கு மனம் வருந்துகிறபோது, நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வார் என்று நம்பிக்கையை இந்த திருப்பாடல் வழியாக தருகிறார்.
நாமும் கடவுளோடு அருட்சாதனங்கள் வழியாக உடன்படிக்கை செய்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு அருட்சாதனத்தைப் பெறுகிறபோதும், இறைவனின் ஆசீரால் கொடையால் நிரப்பப்படுகிறோம். நாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு கடவுள் உண்மையாக இருப்பது போல, நாம் இருக்கிறோமா? சிந்திப்போம், செயல்படுவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்