ஆன்மாவின் குரலுக்குச் செவிகொடுப்போம்
உயிர்த்த இயேசுவை முதலில் பார்த்தவர் என்ற பெருமையை உடையவர் மகதலா மரியா. மரியா இயேசுவைக்கண்டாலும் அவரால் இயேசுவை அடையாளம் காணமுடியவில்லை. அதற்கு இரண்டு காரணங்களை நாம் சொல்லலாம். 1. இயேசுவைப்பிரிந்த துக்கம் அவருடைய கண்களை மறைத்தது. மரியா எந்த அளவுக்கு இயேசு மீது அன்பு வைத்திருந்தார் என்பதற்கு, இருள் நீங்கும் முன்பே தனி ஆளாக, பெண்ணாக இருந்தாலும் துணிவோடு கல்லறை வாயிலுக்கு இயேசுவைத்தேடிவந்ததைச்சொல்லலாம். அந்த அளவுக்கு இயேசு மீது அவர் அன்பு வைத்திருந்தார். அந்த அன்புதான் இயேசுவின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத சோகத்தைக்கொடுத்தது. எனவே தான் இயேசு கண்ணெதிரே நின்றாலும் அவரால் இயேசுவை அடையாளம் காணமுடியவில்லை. வாழ்வில் நமக்கேற்படும் துன்பங்களும், கலக்கங்களும் கடவுளை அறிந்துகொள்வதற்கு தடைக்கற்களாக இருக்கிறது. 2. அவளுடைய பார்வை கல்லறையில் பதிந்திருந்ததால், உயிர்த்த இயேசுவைப்பார்க்க முடியவில்லை. அதாவது, கல்லறையைத்தாண்டி மரியாளால் சிந்திக்க முடியவில்லை. இயேசு இலாசரை உயிர்ப்பித்திருக்கிறார். நாற்றமடித்த உடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அப்படி வல்லமை பொருந்திய இயேசுவால், அவர் சொன்னதுபோல் உயிர்த்தெழ முடியும் என்ற சிந்தனையே மரியாளிடம் இல்லை. எனவேதான், அவளின் பார்வை கல்லறையில் பதிந்திருக்கிறது. உயிர்த்த இயேசுவை விட்டு விலகி இருக்கிறது.
மரியாளின் இந்தப்பார்வையை நமது வாழ்வுக்கு ஒப்பிட்டுப்பார்க்கலாம். மனித வாழ்வு என்பது ஒரு போராட்ட வாழ்வு. உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையேயான போராட்ட வாழ்வு. உடலுக்கும், ஆன்மாவுக்கும் இடையேயான போராட்டம், வாழ்வின் இறுதிமூச்சு வரை இருந்துகொண்டே இருக்கும். இந்த போராட்டத்தில் நம்மை நிலைநிறுத்திக்கொண்டு, துணிவோடு போராடுவதுதான், வாழ்வின் வெற்றியின் இரகசியம். இதைத்தான் இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. எவ்வாறு மரியாள் கல்லறையின் மீது தனது பார்வையை பதிய வைத்திருந்ததால், உயிர்த்த இயேசு என்னும் விலைமதிப்பில்லாத செல்வத்தை, காணாமல் இருந்தாளோ, அதேபோல் உடல் சார்ந்த எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதால், ஆன்மா நமக்கு கொடுக்கும் நிலையான பேரின்பத்தைக் காணாமல் விட்டுவிடுகிறோம். இயேசுவின் வார்த்தைகள் மரியாளின் பார்வையை மாற்றி, விலைமதிப்பில்லாத செல்வத்தைப்பற்றிக் கொள்ள உதவி செய்கிறது.
நம்முடைய வாழ்வு பெரும்பாலும் ஆன்ம, ஆன்மீக வாழ்வில் அக்கறை கொள்ளாமல், இந்த உலகம் சார்ந்தவற்றில் சிந்திப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறது. இதனால் நாம் உண்மையான மகிழ்ச்சியை, பேரின்பத்தை இழந்துகொண்டிருக்கிறோம். ஆண்டவரின் வார்த்தை துணைகொண்டு, ஆன்மா விடுக்கும் அழைப்பிற்கு செவிகொடுத்து, மனமகிழ்ச்சியைப்பெறுவோம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்