ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்
திருப்பாடல் 126: 1 – 2b, 2c – 3, 4 – 5, 6
இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளதாக திருப்பாடல் ஆசிரியர் பாடுகிறார். இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் பல அற்புதச் செயல்களைச் செய்திருந்தாலும், “மாபெரும்” செயல் என்று ஆசிரியர் கூறுவது என்ன? முதலாவது இறைவார்த்தை சொல்கிறது: ஆண்டவர் சீயோனின் அடிமைநிலையை மாற்றினார். சீயோன் என்பது எருசலேம் நகரைக் குறிக்கிற வார்த்தை. எருசலேம் பகை நாட்டினரால் தாக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளாக்கப்பட்டது. இனிமேல் மீண்டு வராது, அதனுடைய மகிமை முடிந்து விட்டது என்று நம்பிக்கையிழந்திருந்த நேரத்தில், ஆண்டவர் அற்புதமாக தன்னுடைய வல்ல செயல்களினால் எருசலேமை மீட்டார். மீண்டும் புதுபொலிவு பெறச் செய்தார்.
எருசலேம் நகரம் மீது இறைவன் கொண்டிருக்கிற அன்பிற்கான காரணம் என்ன? ஏனென்றால், இறைவன் எருசலேமில் குடிகொண்டிருக்கிறார். அது தான் மண்ணகத்தில் ஆண்டவர் வாழும் இடம். தன்னை நாடி வரும் பிள்ளைகளுக்கு ஆறுதல் வழங்குகிற இடம். அந்த இடத்தை பகைநாட்டினரால் ஒன்றுமே செய்ய முடியாது. கடவுளின் பிரசன்னம் அங்கே இருப்பதால் அதைப்போல் பாதுகாப்பான இடம் ஒன்றுமே கிடையாது. பின் எப்படி எருசலேம் எதிரிகளால் கைப்பற்றப்பட்டது? எருசலேமை எதிரிகள் கைப்பற்றவில்லை, மாறாக, கடவுள் அவர்களிடத்தில் ஒப்புவித்தார். இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக செய்த பாவங்களின் பொருட்டு, அவர் எதிரிகளிடம் கையளித்தார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் திருந்தியவுடன், கடவுள் அவர்களை விடுவித்து, எருசலேமை மகிமைப்படுத்தினார்.
நம்முடைய வாழ்வில் நாம் ஆண்டவரோடு இணைந்திருக்க இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது. ஆண்டவரோடு இணைந்திருக்கிறபோது எப்போதும் நமக்கு வெற்றியே வரும். நம்முடைய வாழ்வில் நாம் தோல்வியைச் சந்திக்க காரணம், கடவுளை விட்டு விலகிச் செல்வதுதான். கடவுளோடு இணைந்திருக்கிற வரம் கேட்டு மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்