ஆண்டவர் தம் மக்களுக்கு சமாதானம் அருள்வாராக!
திருப்பாடல் 29: 1, 2, 3 – 4, 9 – 10
கடுமையான மழையும், இடிமுழக்கமும், கண்களைப் பறிக்கும் மின்னலும் நமக்குத் தோன்றுகிறபோது, நாம் எப்படி உணர்வோம்? நிச்சயமாக பயம் நம்மைத் தொற்றிக்கொள்ளும். என்ன நேரிடுமோ? என்கிற மனக்கலக்கம் நம்மை ஆட்கொள்ளும். ஏனென்றால், இருக்கிற சூழல் அவ்வளவுக்கு கடுமையானது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், தாவீது அரசரின் மனநிலை சற்று மாறுபட்டதாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. அவர் கடவுள் மட்டில் தனக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அவருடைய மனநிலை அமைந்துள்ளது.
இயற்கையின் கடுமையான சூழ்நிலையில் மக்கள் அனைவரும் மனக்கலக்கத்தில் இருக்கிற வேளையில், தாவீது அரசர் நிகழ்வதை நினைத்து பயப்படாமல், கடவுளின் மேன்மையை, மாண்பை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார். வியந்துபார்க்கிறார். அந்த வியப்பை நம்பிக்கையாக வடிக்கிறார். அந்த வியப்பின் ஆழத்தில் மக்களுக்காக பரிந்துபேசுகிறார். கலங்கி, பயந்துபோய் இருக்கிற மக்களுக்கு ஆண்டவர் தாமே சமாதானத்தை வழங்கிட வேண்டும் என்று வேண்டுதல் செய்கிறார். இன்றைக்கு நற்செய்தியிலும், உண்பதற்கு அப்பம் இல்லையே என்று சீடர்கள் கலங்கிப்போய் இருக்கிறார்கள். இயேசு கடவுளின் வல்லமையை அவர்கள் பார்த்தபிறகும், இப்படி இருப்பதை நினைத்து, கடிந்துகொள்கிறார்.
நமது வாழ்க்கையில் நடக்கும் ஒரு சில நிகழ்வுகளைப்பார்த்து வெகு எளிதாக, நாமும் கலங்கிப்போகிறோம். அந்த கலக்கமான நேரத்தில், எதைப்பற்றியும் கவலைப்படாமல், கடவுள் மட்டில் உறுதியுள்ளவர்களாக வாழ, இந்த திருப்பாடலை தியானிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்