ஆண்டவர் தம் செயல்களை மக்கள் அறியச்செய்யுங்கள்
திருப்பாடல் 105: 1 – 2, 3 – 4, 6 – 7
இன்றைய திருப்பாடல், கிறிஸ்தவனின் முக்கியமான கடமையை நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அதுதான் ”அறியச்செய்வது”. “அறியச்செய்வது“ என்றால் என்ன? நாம் அறிந்த உண்மையை மற்றவர்களுக்கு அறிவிப்பது, தெரியப்படுத்துவது. எதனை அறியச்செய்ய வேண்டும்? என்று திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இறைவன் செய்திருக்கிற இரக்கச்செயல்களை, அற்புதங்களை, வல்ல செயல்களை மற்றவர்கள் அறியச்செய்யுங்கள் என்பது, ஆசிரியரின் வேண்டுகோளாக இருக்கிறது. இந்த அழைப்பு யாருக்கு விடுக்கப்படுகிறது? கடவுளை அறிந்தவர்கள் அனைவருமே இந்த நற்செய்திப்பணியில் ஈடுபட அழைப்புவிடுக்கப்படுகிறார்கள்.
இன்றைக்கு நாம் வாழும் உலகில், மக்களின் அறிவை மழுங்கடிப்பதிலும், மக்கள் எதையும் அறிந்து கொள்ளக்கூடாது என்பதிலும் நம்மை ஆளக்கூடியவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி மக்கள் விழிப்புணர்வு அடைகிறபோது, அதனை திசை திருப்ப, மக்களின் நாட்டுப்பற்றை தங்களுக்குச் சாதகமாக்கி, பிரச்சனையை திசைதிருப்பி விடுகிறார்கள். தங்களது பாக்கெட்டை நிரப்புவதற்காக, மக்களை காவு கொடுக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய சந்தையை திறந்துவிடுகிறார்கள். இவையனைத்துமே சாதாரண, சாமானிய மக்களின் அறிவையும், ஆற்றலையும் மழுங்கச்செய்து, அவர்களைச் சிந்திக்க விடாமல், தேங்கி நிற்கச் செய்வதற்காகவே. இப்படிப்பட்ட அரசியல்வாதிகளின், அதிகாரவர்க்கத்தினரின் அடாவடிகளை மக்கள் அறியச்செய்வது, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கிற அனைவரின் கடமையாக இருக்கிறது.
நம்முடைய வாழ்வில், இந்த “அறியச்செய்கிற“ பணியை நாம் செய்கிறோமா? சிந்தித்துப்பார்ப்போம். கடவுளை அறியச்செய்வது என்பது வெறும் வார்த்தையில் மட்டும் அறிவிப்பது அல்ல, அதையும் கடந்து நம்முடைய தியாக வாழ்வினால் அறிவிப்பது. அதுதான் முழுமையான அறிவிப்பு. அதனை நாம் செய்வதற்கு, இந்த திருப்பாடல் நமக்கு உறுதி தரட்டும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்