ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்
திருப்பாடல் 145: 8 – 9, 13c – 14, 17 – 18
திருப்பாடல் 145 கடவுளைப் புகழக்கூடிய திருப்பாடல். திருப்பாடல்கள் வரிசையில் கடைசியாக வரக்கூடிய அதிகாரங்கள், கடவுளைப் போற்றுவதாக, புகழ்வதாக அமைந்துள்ளது. திருப்பாடல் 144: 9 ல், தாவீது கூறுகிறார்: ”இறைவா, நான் உமக்குப் புதியதொரு பாடல் பாடுவேன். பதின் நரம்பு வீணையால், உமக்குப் புகழ் பாடுவேன்”. இந்த வாக்குறுதியை, இந்த அதிகாரத்திற்குப் பிறகு வரக்கூடிய திருப்பாடல்கள் அவர் வெளிப்படுத்துகிறார். அதுதான், தொடர்ச்சியான கடவுள் புகழ்ச்சிப்பாடல்கள்.
எப்படி திருப்பாடல்களின் இறுதி அதிகாரங்கள், கடவுளைப் போற்றுவதாகவும், அவருடைய பண்புகளை எண்ணிப்பார்த்து, மகிமைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறதோ, அதேபோல நமது வாழ்க்கையின் கடைசி நாட்களில் நாம், ஆண்டவரின் திருப்பெயரைப் போற்றுவதற்கு செலவிட வேண்டும். அது நமது விண்ணகப் பயணத்திற்கான, சிறப்பான தயாரிப்பாக இருக்கும். கடவுளைப் போற்றுவது நமது வாழ்க்கையில் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அமைய வேண்டும். திருப்பாடல்களின் ஒரு சில அதிகாரங்களைப்போல (25, 34…) இந்த திருப்பாடலும், எளிதாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக, எபிரேய மொழியின் ”எழுத்து வரிசையில்(Alphabets) இந்த பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது.
நமது வாழ்க்கையின் ஒவ்வொருநாளும், இரவில் தூங்கச்செல்வதற்கு முன்னதாக நாம் கடவுளைப் போற்ற வேண்டும். கடவுள் செய்திருக்கிற எல்லாவிதமான நன்மைகளையும், வல்ல செயல்களையும் நினைத்து, மகிழ்ச்சியோடு போற்றுவோம். கடவுளின் அருகில் நாம் நெருங்கிவருவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்