ஆண்டவரே, நீர் விரும்பினால் என் நோயை நீக்க உம்மால் முடியும்” (லூக்கா 5:12)
— விவிலியத்தைப் புரட்டும்போது நம்பிக்கை என்னும் ஆழ்ந்த சக்தியோடு செயல்பட்ட பல ஆண்களையும் பெண்களையும் நாம் சந்திக்கிறோம். ஆபிரகாம் ”நம்பிக்கையின் தந்தை” என அழைக்கப்படுகிறார். கடவுள் தம் வாக்கில் தவறாதவர் என்றும் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறமாட்டார் என்றும் ஆபிரகாம் முழுமையாக நம்பினார். அதுபோல, இயேசுவைச் சந்தித்த மனிதருள் பலர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததை நாம் காண்கிறோம். அதிசய செயல்களைப் புரிந்த போதெல்லாம் இயேசு மக்களிடமிருந்த நம்பிக்கையே அச்செயல்கள் நிகழக் காரணம் என்று கூறினார். மக்கள் நம்பிக்கை இல்லாதிருந்தபோது அவர்கள் நடுவே இயேசு அதிசய செயல்களை ஆற்ற இயலாமல் போயிற்று. தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இயேசுவை நோக்கி, ”ஆண்டவரே, நீர் விரும்பினால் என் நோயை நீக்க உம்மால் முடியும்” (லூக் 5:12) என்று மன்றாடினார். இந்த மனிதரின் வார்த்தையில் நம்பிக்கை துலங்குவதை நாம் எளிதில் காணலாம். அவர் தம் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று கேட்கவில்லை. மாறாக, இயேசுவின் விருப்பம் எதுவோ அதுவே நடக்கட்டும் என்றுதான் அந்த நோயாளர் கருத்துத் தெரிவிக்கிறார்.
— இயேசு விரும்பியபடியே நடக்கட்டும் என்று கூறிய நோயாளர் இயேசுவிடம் தம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். இயேசுவிடம் கடவுளின் சக்தி உண்டு; இயேசு ஆற்றுகின்ற வல்ல செயல்கள் கடவுளிடமிருந்தே புறப்படுகின்ற ஆற்றல் மிக்க அடையாளங்கள் என அந்நோயாளர் நம்பியதால்தான் அவர் இயேசுவை மனதார அணுகிச் செல்கின்றார். அம்மனிதரின் நம்பிக்கை வீண்போகவில்லை. இயேசு அவரைப் பார்த்து, ”நான் விரும்புகிறேன்; உமது நோய் நீங்குக!” (லூக் 5:13) என்றதும் அம்மனிதரின் உள்ளத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. தம் மன்றாட்டு கேட்கப்பட்டதை உணர்ந்த அவர் நன்றியுணர்வோடு இயேசுவை நோக்குகின்றார். நம் வாழ்வில் நம்பிக்கை இருந்தால் அதிசய செயல்கள் நிகழும் என இயேசு உணர்த்துகிறார்.
மன்றாட்டு
இறைவா, நாங்கள் நம்பிக்கையோடு உம்மை அணுகிவர அருள்தாரும்.
–அருட்திரு பவுல் லியோன் வறுவேல்